விஜய் மல்லையா, நிர்வ மோடி... தப்பிய தொழிலதிபர்களிடம் எவ்வளவு வசூல் தெரியுமா?
முகப்பு > செய்திகள் > இந்தியாவங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடிய தொழிலதிபர்களிடம் இருந்து சுமார் 13,109 கோடி ரூபாயை மீட்டு உள்ளதாக நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வங்கிகளில் கடன் வாங்கி அதை திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடிய தொழில் அதிபர்களான நிர்வ மோடி, விஜய் மல்லையா மற்றும் மெஹுல் சோகிஸ் ஆகியோரின் சொத்துகளை ஏலம் விட்டு அதன் மூலமாக சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை கடன் மீட்புத் தொகையாக வசூல் செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார் நிர்மலா சீதாராமன்.
கடந்த ஜூலை 2021 வரையிலான கணக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் அளித்த அறிக்கையின் படி மொத்தம் 13,109.17 கோடி ரூபாய் சொத்து ஏல விற்பனை மூலம் மீட்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் சமீபமாக விஜய் மல்லையாவிடம் இருந்து கூடுதலாக 792 கோடி ரூபாய் சொத்து ஏல விற்பனை மூலம் மீட்கப்பட்டுள்ளது.
“கடந்த 7 நிதியாண்டுகளில் மட்டும் பொதுத்துறை வங்கிகளுக்காக சுமார் 5.49 ட்ரில்லியன் ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாமல் தப்பி ஓடியவர்களிடம் இருந்து இழந்த பணத்தை மீட்டு மீண்டும் பொதுத்துறை வங்கிகளிடமே கொடுத்துவிட்டோம். இதன் வங்கிகள் இன்று பாதுகாப்பாக உள்ளன. அதில் வாடிக்கையாளர்களின் பணமும் பாதுகாப்பாக உள்ளது” என நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், பல விவகாரங்கள் குறித்தும் நிதி அமைச்சர் பேசுகையில், “சர்வதேச அளவில் நிலவும் விலை உயர்வால் நம் நாட்டு விவசாயிகள் பாதிக்கக் கூடாது. இதற்காக உரத்துக்கான மானிய விலையை அதிகரிப்போம். இதற்காகவே 58,431 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோக, சமையல் எண்ணெய் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கோவிட் அவசர கால நிதி உதவியாக மாநிலங்களுக்கு நிதி உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. கூடுதலாக 15 ஆயிரம் கோடி ரூபாயும் கொடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களில் நிதி நிலைமை சீராகவே உள்ளது. 28 மாநிலங்களில் 2 மாநிலங்களில் நிதி நிலை மட்டும் தான் கடுமையாக சரிந்து உள்ளது” எனக் குறிப்பிட்டு பேசினார்.