ரூ. 13 ஆயிரம் கோடி மோசடியில் தேடப்படும் வைர வியாபாரி நிரவ் மோடி லண்டனில் கைது!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Selvakumar | Mar 20, 2019 05:44 PM
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று விட்டு மோசடி செய்த புகாரில் தேடப்படும் நிரவ் மோடி, லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்சி ஆகிய இருவரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி சட்ட விரோத பரிமாற்ற மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து இவர்கள் மீது சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
மேலும் நிரவ் மோடிக்கு சொந்தமான சுமார் 3000 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. அதற்குள் நிரவ் மோடி லண்டனுக்கு தப்பி சென்றுவிட்டார். இதனை அடுத்து, நிரவ் மோடியை இந்தியா கொண்டு வர வேண்டும் என்று அமலாக்கத்துறை விடுத்த கோரிக்கையை ஏற்று இங்கிலாந்து அரசு கடந்த வாரம் நிரவ் மோடிக்கு எதிரான கைது வாரன்ட்டை பிறப்பித்திருந்தது.
லண்டனின் வெஸ்ட் என்ட் பகுதியில் உள்ள 33 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் நிரவ் மோடி வசித்து வருவதாக நம்பப்படுகிறது. அவர் கடந்த சில நாட்களாக பொது இடங்களில் சுற்றி திரிவது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. இந்நிலையில் நிரவ் மோடி இன்று லண்டனில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளார்.