'வக்கீலுக்கு ஃபீஸ் கொடுக்க...' 'கையில சுத்தமா காசு இல்லங்க...' - இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த விஜய் மல்லையா...!
முகப்பு > செய்திகள் > உலகம்சொத்துக்களை முடக்கியதால் வழக்கறிஞர்களுக்கு பீஸ் கொடுக்க முடியாத சூழல் இருப்பதாக விஜய் மல்லையா இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்திய தொழிலதிபரான விஜய் மல்லையா ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் 9,000 கோடி ரூபாய் அளவுக்கு பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டு இந்தியாவில் இருந்து தப்பித்து தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.
அதோடு விஜய் மல்லையாவின் இந்தியாவில் உள்ள சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன.
தற்போது லண்டன் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை விஜய் மல்லையா தாக்கல் செய்துள்ளார். அதில், இந்தியாவில் உள்ள வழக்கறிஞர்களுக்கு வழக்கு செலவுகளுக்காக பணம் செலுத்துவதற்கு 7.8 கோடி ரூபாய் வழங்கக்கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
இதற்கு முன் தன்னுடைய வங்கி முறைகேடு தொடர்பாக நடைபெற்ற வழக்கை விசாரித்த நீதிபதி பார்னெட், வங்கி முறைகேடு தொடர்பாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை எதிர்த்து வழக்கை நடத்துவதற்கும், மாத செலவினங்களுக்கும் லண்டன் கோர்ட் ஆப் பன்ட்டில் இருந்து பெற்றுக்கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் இதில், இந்தியாவில் நடைபெறும் வழக்கு தொடர்பான செலவினங்கள் சேர்க்கப்படவில்லை. அதனால் அந்த வழக்குகளுக்கு செலவிடப்படும் தொகை மற்றும் வழக்கறிஞர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகைகளுக்காக நிதியை விடுவிக்க வேண்டும் என புதிய மனுவில் விஜய் மல்லையா முறையிட்டுள்ளார்.
இந்தியாவில் விஜய் மல்லையாவின் மீது, மோசடி செய்த பணத்தை திரும்ப செலுத்தக்கோரும் செட்டில்மென்ட் வழக்கு, வங்கிகள் விதித்துள்ள 11.5 விழுக்காடு கூட்டு வட்டி வழக்கு, தப்பியோடிய பொருளாதார குற்றவாளி ஆகிய மூன்று விதமான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குகள் நடைபெறுவதாகவும், இந்த வழக்குகளை அவர் தனித்தனியாக எதிர்கொண்டு வருவதாகவும் விஜய் மல்லையாவின் பிலிப் மார்ஷல் கூறியுள்ளார்.