9 ஆண்டுகளுக்கு முன் காணாமல்போன சிறுமி.. ரிட்டையர் ஆன பிறகும் தேடுதலை தொடர்ந்த போலீஸ் அதிகாரி.. கடைசில நடந்த சுவாரஸ்யம்.!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிரா மாநிலத்தில் 9 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல்போன சிறுமியை தற்போது மீட்டுள்ளனர் காவல்துறையினர். இதனையடுத்து குழந்தையை கடத்தி சென்ற தம்பதியை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
Also Read | 54 வருஷத்துக்கு முன்னாடி விபத்தில் சிக்கிய விமானம்.. சமீபத்துல அதிகாரிகளுக்கு கிடைச்ச ஷாக்-ஆன தகவல்..!
மகாராஷ்டிராவின் மும்பை நகரத்தை சேர்ந்தவர்கள் சந்தோஷ் - பூனம் தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் பிறந்தனர். இருவரும் அருகில் உள்ள கார்ப்பரேஷன் பள்ளியில் படித்துவந்தனர். இந்நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு தனது சகோதரர் ரோஹித்துடன் பள்ளிக்கு சென்ற பூஜா, வீடு திரும்பவில்லை. எப்போதும் நிற்கும் இடத்தில் தனது தங்கை இல்லாததால் ஓடிச் சென்று பெற்றோரிடம் கூறியிருக்கிறார் ரோஹித். இதையடுத்து டிஎன் நகர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்திருக்கின்றனர்.
தேடுதல் வேட்டை
இதனையடுத்து காணாமல் போன பெண்கள் மற்றும் சிறுமிகளின் பட்டியலில் பூஜாவின் பெயரும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இவர்களை கண்டறியும் பொறுப்பு, துணை காவல் ஆய்வாளராக இருந்த ராஜேந்திர தோண்டு போஸ்லே என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. 2008 - 2015ஆம் ஆண்டில் காணாமல் போன 166 பெண்களில் 165 பேரை தனது டீம் உதவியுடன் கண்டுபிடித்து விட்டார் போஸ்லே. ஆனால், அவரால் பூஜாவை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்குள் அவர் ஓய்வும் பெற்றுவிட்டார். ஆனாலும், பூஜாவை தேடும் பணியை அவர் கைவிடவில்லை.
மீட்பு
பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும் பூஜாவை தேடி அலைந்திருக்கிறார் போஸ்லே. அதன் பலனாக கடந்த வியாழக்கிழமை ஒரு குழந்தைகள் காப்பகத்தில் அவர் மேற்கொண்ட ஆய்வில், அங்கே பூஜா இருப்பதை கண்டறிந்திருக்கிறார். அதன்பின்னர் அவரது தாய் பூனம்-க்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர் நேரில் வந்து தனது மகளை சந்தித்து உள்ளார். அவர் தனது மகள் தான் என கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் கூறியிருக்கிறார் பூனம்.
சிறுமியை கடத்திச் சென்ற ஜோசப் டிசௌசா (50), இவரது மனைவி சோனி (37) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். தங்களுக்கு குழந்தை இல்லாததால் பூஜாவை கடத்தியதாக தம்பதி கூறியதாக தெரிகிறது. அந்த தம்பதிக்கு குழந்தை பிறந்தவுடன் பூஜாவை காப்பகத்தில் சேர்த்திருக்கிறார் ஜோசப்.
அதிசயம்
பூஜாவின் உண்மையான பெற்றோர் சமீபத்தில் அந்தேரி பகுதியில் குடியேறியுள்ளனர். அங்கிருந்து 500 மீட்டர் தொலைவில் தான் இந்த சிறுமிகள் காப்பகம் அமைந்திருக்கிறது. இதனிடையே சில ஆண்டுகளுக்கு முன்னர் பூஜாவின் தந்தை மரணமடைந்திருக்கிறார். இது குறித்து பேசிய பூனம்,"எங்களது மகளை காண அவரது தந்தை உயிருடன் இல்லை. என் மகளை கண்டுபிடிக்க உதவிய காவல்துறை அதிகாரி போஸ்லே-வுக்கு நெஞ்சார்ந்த நன்றி" என்றார். இதனிடையே ஓய்வுபெற்ற பிறகும் தொடர்ந்து போராடி பூஜாவை மீட்ட காவல்துறை அதிகாரி போஸ்லே-வை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Also Read | 350 வருஷமாக கடலில் கொட்டிக்கிடந்த பொக்கிஷம்.. துணிஞ்சு இறங்குன வீரர்களுக்கு அடிச்ச ஜாக்பாட்.!