மண்ணுக்குள் புதையும் இந்திய நகரம்.. பிரதமர் அலுலகத்தில் நடந்த அவசர ஆலோசனை.. திகிலூட்டும் பின்னணி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஜோஷிமத் பகுதியில் வசிப்பவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் மோடி உறுதி அளித்திருக்கிறார்.
உத்தரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ளது ஜோஷிமத் என்ற பகுதி. இந்த நகரம், இந்தியா மற்றும் சீனா நாடுகள் எல்லையின் கேட் வேயாக உள்ளது. அதே போல, இந்த நகரின் வழியாக தான் புனித தலமான பத்ரிநாத் கோவிலுக்கும் செல்ல முடியுமாம். இது தவிர அவுலி மலைத் தொடருக்கும் இந்த நகரம் வழியாக தான் செல்ல முடியும் என தகவல்கள் கூறுகின்றது.
இதனால், மிக முக்கியமான நகரமாக பார்க்கப்படும் இந்த ஜோஷிமத் பகுதியில் தான் வீடுகள் மற்றும் கடைகள் உள்ளிட்ட இடங்களில் விரிசல் விழுவதாகவும் சில இடங்கள் மண்ணில் புதைந்து போவதாகவும் தகவல்கள் வெளியானது. சமீப காலமாக இந்த சம்பவம் அடுத்தடுத்து அரங்கேறி வரும் நிலையில் திடீரென எந்த ஒரு தொடர்பும் இல்லாமல் இப்படி வீடுகளில் விரிசல் விழுவதும் இடங்கள் மண்ணில் புதைவதும் அப்பகுதி மக்களை குழப்பத்திலும் அதே வேளையில் பயத்திலும் ஆழ்த்தி இருந்தது.
இதனையடுத்து இதுகுறித்து விசாரிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்த குழு நடத்திய ஆய்வில் ஜோஷிமத் பகுதியில் அதிக நிலச்சரிவு இருப்பதாகவும் சிறிய மழை பெய்தால் கூட நிலச்சரிவு ஏற்படும் என அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். மேலும், இந்த மொத்த நகரத்தின் அடித்தளம் என்பது நிலைத்தன்மை உடையதாக இல்லை என்றும் இதன் காரணமாக தான் அங்குள்ள கடைகள் மற்றும் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் விரிசல் ஏற்படுவதாகவும் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
இந்நிலையில், இதுகுறித்து பிரதமர் அலுவலகத்தில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி கே மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மத்திய அரசு மற்றும் உத்தரகாண்ட் மாநில மூத்த அதிகாரிகள், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்டிஎம்ஏ), இந்திய புவியியல் ஆய்வு மையம் (ஜிஎஸ்ஐ) மற்றும் தேசிய ஹைட்ராலஜி நிறுவனம் (NIH) ஆகியவற்றை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது, நிலைமையைக் கட்டுப்படுத்தவும், தொடர்ச்சியான நில அதிர்வு கண்காணிப்பை மேற்கொள்ளவும், குறிப்பிட்ட காலத்திற்குள் புனரமைப்புத் திட்டத்தைத் தயாரிக்கவும் மற்றும் ஆபத்து உணர்திறன் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தை உருவாக்கவும் ஒருங்கிணைந்து செயல்படுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஜோஷிமத் பகுதியில் தங்கி இருந்தவர்கள் பாதுகாப்பு காரணம் கருதி வேறு இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஆரம்ப கட்டமாக ஒருகோடி ரூபாய் நிதியை பிரதமர் மோடி ஒதுக்கியுள்ளார். மேலும், இந்த திட்டத்தில் மத்திய அரசு முழு உதவியையும் செய்யும் எனவும் பிரதமர் உறுதி அளித்திருக்கிறார்.