"வயசு எல்லாம் ஒரு நம்பர், அதுக்கு இவர் தான் சாம்பிள்.." 85 வயதில் முதல் கார்.. திரும்பி பார்க்க வைத்த முதியவர்..
முகப்பு > செய்திகள் > இந்தியாஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நிச்சயம் நிறைய அழகான மற்றும் மீண்டும் கிடைக்காத சில அரிய தருணங்கள் கூட இருக்கும்.
ஆனால், "முதலாவது" என்ற வார்த்தைக்குள் அனைவரும் அடங்கி விடுவார்கள். அதாவது, முதல் நாள் பள்ளிக்கு சென்றது, முதல் காதல், முதல் அழுகை, முதல் வேலை, முதல் சம்பளம், முதல் பைக், என அடுக்கிக் கொண்டே போகலாம்.
அப்படி 85 வயதான ஒரு முதியவர், தனது வாழ்வில் முதன் முதலாக கார் வாங்கிய செய்தி ஒன்று, படிப்போர் பலரையும் நெகிழச் செய்துள்ளது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நானாஜி என அழைக்கப்படும் ராதா கிருஷ்ணன் சௌத்ரி, தன்னுடைய 85 வயதில் எப்படி முதல் காரை வாங்கினார் என்பது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ, தற்போது சுமார் 24 மில்லியனுக்கு அதிகமான பார்வையாளர்களைக் கடந்து, பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
சுமார் 50 ஆண்டுகளாக, நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ராதாகிருஷ்ணன், மற்ற முதியோர்களைப் போல, தனது பணிக்காலம் முடிந்ததும் ஒதுங்கிக் கொள்ளவில்லை. ஓய்வுக்கு பின்னும் ஏதாவது ஒரு தொழில் செய்ய வேண்டும் என ராதாகிருஷ்ணன் முடிவு செய்துள்ளார். அப்படி ஒரு சூழ்நிலையில், ராதா கிருஷ்ணன் மகளுக்கு அடிக்கடி முடி கொட்டுவது வருவது ஒரு பெரிய பிரச்சனையாக இருந்துள்ளதாக தெரிகிறது.
இதனால் ராதா கிருஷ்ணன் சௌத்ரி மற்றும் அவரது மனைவி ஆகியோர், மகளுக்கு முடி கொட்டுவதை நிறுத்துவதற்காக தலைமுடி எண்ணெய் ஒன்றையும் தயாரிக்க முடிவு செய்துள்ளனர்.
மொத்தமாக, 50-க்கும் மேற்பட்ட மூலிகைகளை ஆராய்ச்சி செய்து ஒரு எண்ணெயை அவர்கள் உருவாக்கி உள்ளார்கள். இந்த எண்ணெய் மகளின் முடி உதிர்வு பிரச்சனைக்கு தீர்வு காணவே, இந்த பலன் பலருக்கும் கிடைக்க வேண்டும் என்றும் ராதா கிருஷ்ணன் முடிவு செய்துள்ளார். இதற்காக, தான் தயாரித்த மூலிகையை உற்பத்தி செய்யத் தொடங்கிய ராதாகிருஷ்ணன், தனது நிறுவனத்தை கடந்த 2021 ஆம் ஆண்டு ஆரம்பித்துள்ளார்.
அப்படி இந்த நிறுவனம் தொடங்கிய ஒரே ஆண்டில், மிகப்பெரிய அளவில் லாபம் கிடைத்த நிலையில், ஒரு ஆண்டுக்குள் புதிய கார் ஒன்றையும் ராதா கிருஷ்ணன் வாங்கி விட்டார். இது தொடர்பாக வீடியோ ஒன்றும் அவரின் instagram பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பார்வை மற்றும் பணி, நம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் டீம் ஒர்க் ஆகிய நான்கும் தான் தங்களின் வெற்றிக்கு காரணம் என ராதா கிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
தனது 85 ஆவது வயதில், முதல் காரை வாங்கிய ராதா கிருஷ்ணனை பலரும் பாராட்டி வருகின்றனர். வயது என்பது வெறும் எண் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் ராதா கிருஷ்ணனின் செயல் இருந்ததாக சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.