"இப்படி ஒரு திறமையா.?".. விநாயகர் சிலைகளை தத்ரூபமாக உருவாக்கும் சிறுவன்.. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய பணக்காரர்களுள் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில்பகிர்ந்துள்ள சிறுவனின் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
விநாயகர் சதுர்த்தி
இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்திக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாடு முழுவதும் முக்கிய இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து மக்கள் வழிபட்டு வருகின்றனர். பொதுவாக விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, பெரும்பாலான வீடுகளில் சிறிய வடிவிலான மண் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபடுவது வழக்கமாகும். அதன் பிறகு அருகில் உள்ள நீர்நிலைகளில் அதனை கரைப்பது வழக்கம். சிலர் தங்கள் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பெரிய வடிவிலான விநாயகர் சிலைகள் கரைக்க கொண்டு செல்லும் போது, அந்த வாகனங்களில் தங்களது விநாயகர் சிலைகளையும் சேர்த்து அனுப்புவார்கள்.
இந்த நாட்களில் விநாயகர் சிலைகளை செய்யும் பணிகளில் பலர் ஈடுபடுவது உண்டு. மண்ணால் செய்யப்படும் இந்த சிலைகள் காலத்திற்கு தகுந்தபடி வெவ்வேறு விதமாக உருவாக்கப்படுவது வழக்கமாகும். இந்நிலையில், சிறுவன் ஒருவன் மண்ணைக்கொண்டு விநாயகர் சிலையை செய்யும் வீடியோவை ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்திருக்கிறார்.
ஆனந்த் மஹிந்திரா
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 9.6 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
திறமை
இந்நிலையில், ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில் சிறுவன் மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையின் துதிக்கையை அழகாக வளைத்து பொருத்துகிறார். இந்த பதிவில் ஆனந்த் மஹிந்திரா,"இந்த சிறுவனின் கை ஒரு சிறந்த கைவினைஞர் அல்லது சிற்பியைப் போல மிக லாவகமாக அதே சமயம் நேர்த்தியாக செயல்படுகிறது. இது போன்ற திறமைகளை கொண்ட குழந்தைகள் அடுத்த கட்டத்திற்கு செல்லும் வகையில் ஏதேனும் பயிற்சி பெறுகிறார்களா அல்லது எதிர்காலத்தில் இந்த திறமையை விட்டுவிட வேண்டுமா" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இந்த வீடியோ சமூக வலை தளங்களில் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. இது குழந்தை தொழிலாளர் முறையை ஆதரிப்பது போல இருக்கிறது எனவும், ஒருவேளை இந்த சிறுவன் தனது குடும்பத்தார் சிலைகளை செய்வதை பார்த்து அதனால் ஈர்க்கப்பட்டிருக்கலாம் எனவும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
His hands move with the fluency of a great sculptor. 👏🏽👏🏽👏🏽 I wonder if kids like him get the training they deserve or have to abandon their talent…? https://t.co/XzMgeg930q
— anand mahindra (@anandmahindra) August 28, 2022