"அவங்க பத்தாவது கூட 'பாஸ்' ஆகல... அப்புறம்,,, 'கவர்மெண்ட் வேல' கிடைச்சது எப்படி...?" - தலைமறைவாக உள்ள ‘தங்க கடத்தல்’ ஸ்வப்னா குறித்து பல ‘அதிர்ச்சி’ தகவல்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருவனந்தபுரம் விமான நிலையத்தில் சில தினங்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரம் மணப்பாடு பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு வந்த பெட்டியில் 30 கிலோ கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்ட நிலையில், இது தொடர்பாக சரித் நாயர் என்பவர் கைது செய்யப்பட்டார்.
சரித் நாயர் முன்னதாக தூதரக அலுவலகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வந்த நிலையில், போலி ஐடி மூலம் பெட்டியை கைப்பற்ற முயற்சி செய்த போது சிக்கியதாக தெரிகிறது. மேலும், இந்த வழக்கில் மற்றொரு முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் என்பவர் தற்போது தலைமறைவாக உள்ளார். அவர் இந்த வழக்கு தொடர்பாக கேரள ஐகோர்ட்டில் முன்ஜாமீன் வேண்டி மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும், கேரள முதல்வர் அலுவலகத்தில் இருந்து ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சரித் நாயர் ஆகியோரை மீட்க உதவிகள் நடப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள அவரது இளைய சகோதரரான பிரைட் என்பவர் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். மனோரமா நியூஸ் சேனலிற்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், 'எனது 17 வயதில் நான் அமெரிக்கா வந்து விட்டேன். சில வருடங்களுக்கு முன் சொந்த ஊரான கேரளா சென்ற போது, நான் சொத்தில் பங்கு கேட்பேன் என நினைத்து சொந்த தம்பி என்று கூட பார்க்காமல் எனது அக்கா ஸ்வப்னா, என் கை, கால்களை உடைத்து விடுவதாகவும், என் மீது பொய் வழக்கு போட்டு விடுவதாகவும் மிரட்டினார். அதன் பிறகு நான் கேரளா செல்லவில்லை. அதே போல, எனது +2 படிப்புக்கு பின்னர் சகோதரியிடம் அந்த அளவுக்கு தொடர்பில் இருந்ததில்லை. அது மட்டுமில்லாமல் எனது அக்கா பத்தாவது தேர்ச்சி பெற்றாரா என்பதில் கூட எனக்கு சந்தேகம் இருக்கிறது' என தெரிவித்துள்ளார்.
ஸ்வப்னா சுரேஷ் தம்பி பிரைட் அளித்த தகவல், கேரள அரசியல் வாட்டாரத்தில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்படி அவர் சொல்வது போல ஸ்வப்னா சுரேஷ் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறவில்லை என்றால் கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப துறை வரை ஸ்வப்னா சுரேஷ் எப்படி பணிபுரிந்தார் என பல்வேறு கேள்விகள் மீண்டும் கேரள அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.
முன்னதாக, ஸ்வப்னா சுரேஷ் அபுதாபி விமான நிலையத்தில் பணிபுரிந்துள்ளார். தொடர்ந்து, ஏர் இந்தியாவில் பணிபுரிந்த போது, சக ஊழியர் ஒருவர் மீது தவறான பாலியல் புகாரை அளித்து சிக்கியிருந்தார். மேலும் கேரளாவில் அமைந்துள்ள ஐக்கிய அரபு அமீரகத்திலும் பணிபுரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.