'வளைகுடாவிலிருந்து வந்த 30 கிலோ 'கடத்தல் தங்கம்'... மாட்டிக்கொண்ட 'அரசு' ஊழியர், ஓட்டம் பிடித்த பெண் 'அதிகாரி' - கேரள அரசியலில் 'பரபரப்பு'!
முகப்பு > செய்திகள் > இந்தியாதிருவனந்தபுரத்தில் அமைந்துள்ள ஐக்கிய அரபு அமீரக துணை தூதரக விலாசத்திற்கு விமானம் மூலம் அனுமதியின்றி அனுப்பப்பட்ட 30 கிலோ தங்கத்தை கேரளா சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றின் மதிப்பு சுமார் 13 கோடியே 50 லட்சம் ஆகும்.
முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வழியே கேரளவிற்குள் தங்கம் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில் விமான நிலைய சரக்கு பிரிவில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரக அரசின் துணை தூதரக விலாசத்திற்கு அனுப்பப்பட்டிருந்த பெட்டி ஒன்றை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்த போது, அதில் 30 கிலோ எடையுள்ள தங்கக்கட்டிகளை மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தூதரக அதிகாரிகளின் பெயரில் தங்கம் கடத்தியது யார் என்று சரக்குப்பதிவு ஆவணங்கள் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், தூதரகத்தில் முன்னதாக பணிபுரிந்த சரித் நாயர் என்பவர் சுங்கத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அதே போல தூதரகத்தில் முன்னதாக பணிபுரிந்த ஸ்வப்னா சுரேஷ் என்பவர் தலைமறைவாகியுள்ளார். தூதரகத்தில் பணிபுரிந்து வந்த ஸ்வப்னா, கடந்த ஆறு மாதங்களுக்கு முன் அங்கிருந்து விலகி கேரள அரசின் ஐ.டி துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், அவரை பணியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளனர். முன்னதாக ஸ்வப்னா பணிபுரிந்த நிறுவனம் ஒன்றில், அதிகாரி ஒருவர் மீது தவறாக புகார் கொடுத்ததன் பெயரில் வழக்கு ஒன்றும் ஸ்வப்னா பெயரில் உள்ளது.
சரித் என்ற நபர், போலி ஆதாரம் கொடுத்து கடத்தல் தங்கம் வந்த பெட்டியை கைப்பற்ற முயற்சித்துள்ளார். இதுகுறித்து மேலும் தகவல்களை சுங்கத்துறை அதிகாரிகள் வெளியிடவில்லை. இந்த கடத்தல் வழக்கில் சம்மந்தப்பட்ட இருவரும் முன்னதாக அரசின் கீழ் பணிபுரிந்து வந்த நிலையில், இதன் பின்னால் பல முக்கிய புள்ளிகளின் தொடர்பிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
சுங்கத்துறை அதிகாரிகள் மூலம் கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்ட நிலையில், கேரள முதல்வர் அலுவலகத்தில் இருந்து கடத்தல் தொடர்பாக சம்மந்தப்பட்ட நபர்களை காப்பாற்றவும் முயற்சிகள் நடந்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அதே வேளையில், சுங்கத்துறை அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு கேரள முதல்வர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான உறுதியான தகவல், விசாரணை முடிந்த பின்னரே முழுமையாக தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.