லாக்டவுன் '3.0'... ஆகஸ்ட் '31' வரை ஊரடங்கு நீட்டிப்பு... 'மத்திய' அரசு அறிவித்த சில 'முக்கிய' தளர்வுகள்... தமிழகத்தின் 'நிலை' என்ன??... முழு 'விவரம்' உள்ளே!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா காரணமாக நாடு முழுவதும் தற்போது ஊரடங்கு அமலிலுள்ள நிலையில் அடுத்த கட்ட ஊரடங்கு குறித்து சில தளர்வுகள் உட்பட முக்கிய அறிவிப்புகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும், ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஊரடங்கு தொடரும் என அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல அந்தந்த மாநில முதல்வர்கள் மாநிலத்தின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கலாம் என தெரிவித்துள்ளது. மத்திய அரசின் அறிவிப்புகளில் மிகவும் முக்கிய அறிவிப்பாக, ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வரை நாடு முழுவதும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே போல பொழுதுபோக்கு பூங்காக்கள், மதுபான கூடங்கள், கோவில் திருவிழாக்கள், அரசியல் கூட்டங்கள், மெட்ரோ ரெயில்கள், திரையரங்குகள், நீச்சல் குளம், மக்கள் தேவையில்லாமல் கூட்டம் கூடுதல் ஆகியவை செயல்பட விதித்த தடை தொடர்கிறது. மேலும், பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், இருதய பிரச்சனை மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் வீட்டில் பத்திரமாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்கள் மீதான தடை தொடரும் நிலையில், வெளிநாடு வாழ் இந்தியர்களை அழைத்து வர விமானங்கள் அனுமதிக்கப்படும்.
ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதியன்று சுதந்திர விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை குறைவான ஆட்களை கொண்டு சமூக இடைவெளியுடன் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சில முக்கிய தளர்வுகளும் மூன்றாம் கட்ட ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளது. யோகா மையங்கள் மற்றும் உடற்பயிற்சி மையங்கள் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி முதல் செயல்பட அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இரவில் வெளியே செல்ல நாடு முழுவதும் தடை இருந்த நிலையில், இரவு நேர ஊரடங்கை ரத்து செய்துள்ளது.
ஆகஸ்ட் 1 முதல் கொரோனா பொதுமுடக்கத்தின் 3ஆம் கட்ட தளர்வுகள் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து நாளை மருத்துவ குழுவுடன் ஆலோசனை நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.