மனைவி மட்டன் சமைக்காததால் கோபம்.. போலீஸ்ல புகார் கொடுத்த கணவர்.. அடுத்து நடந்த வேடிக்கை சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமனைவி மட்டன் சமைத்துக் கொடுக்கவில்லை என காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண்ணான 100க்கு போன் செய்து புகார் அளித்திருக்கிறார் கணவர் ஒருவர்.
தெலுங்கானா
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள செர்லா கௌராராம் கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன். இவர் ஹோலி பண்டிகை தினத்தன்று காவல்துறை கண்காணிப்பு அழைப்பு எண்ணான 100க்கு தொடர்ந்து போன் செய்து உள்ளார். ஆரம்பத்தில் யாரோ விளையாடுகிறார்கள் என நினைத்து இந்த அழைப்பை காவல்துறை அதிகாரிகள் துண்டித்தனர். ஆனாலும், நவீன் விட்டபாடில்லை. 6 முறை அடுத்தடுத்து 100க்கு போன் செய்திருக்கிறார் நவீன். கடைசியாக போன் எடுக்கப்பட்டு இருக்கிறது. அப்போது தன்னுடைய புகாரை நவீன் தெரிவிக்க, காவல்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மட்டன்
ஹோலி பண்டிகை தினத்தன்று வீட்டிற்கு மட்டன் வாங்கிச் சென்ற நவீன், தனது மனையிடம் அதை கொடுத்து சமைத்துக் கொடுக்குமாறு கூறியுள்ளார். ஆனால், மட்டனை சமைத்துக்கொடுக்க நவீனின் மனைவி மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. ஹோலி தினத்தில் தான் விரும்பியதை சமைக்க வேண்டும் என நவீன் கூறியிருக்கிறார். ஆனாலும் அவரது மனைவி சமைக்கவில்லை. இதனால் கோபமடைந்த நவீன் தனது செல்போனை எடுத்து 100 கு போன் செய்திருக்கிறார். சம்பவம் நடந்த அன்று நவீன் குடிபோதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
கைது
காவல்துறைக்கு தொடர்ந்து போன் மூலமாக தொந்தரவு அளித்த நவீன் குறித்து மேலதிகாரிடத்தில் புகார் அளித்திருக்கிறார்கள் கண்காணிப்புத்துறை அதிகாரிகள். இதனை அடுத்து அவரது செல்போன் எண்ணை கொண்டு நவீனின் முகவரியை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். சம்பவம் நடந்த மறுநாள், நவீனின் வீட்டிற்கு வந்த காவல்துறை அதிகாரிகள் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
வழக்கு பதிவு
நவீன் மீது பொது இடத்தில் தொல்லை கொடுத்தல் (இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 290), குடிபோதையில் தவறாக நடந்துகொள்தல் (இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 510) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எச்சரிக்கை
பொதுமக்கள் காவல்துறை கட்டுப்பாட்டு அழைப்பு எண்ணான 100 க்கு கால் செய்யும் வசதியை தவறாக பயன்படுத்த வேண்டாம் என காவல்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதனால் காவல்துறை அதிகாரிகளின் நேரம் வீணடிக்கப்படுவதுடன் உண்மையாகவே உதவி தேவைப்பட்டு கால் செய்வோருக்கு உதவ முடிவதில் இது சிக்கலை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தனர்.
மனைவி மட்டன் சமைக்கவில்லை என காவல்துறையில் புகார் அளித்த கணவன் கைது செய்யப்பட்ட சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.