ஏப்ரல், மே இல்ல.. மார்ச்லயே மண்டையை பிளந்த வெயில். 122 ஆண்டுகளில் இல்லாத உச்சம்.. வானிலை ஆய்வுமையம் அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கடந்த 122 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுட்டெரிக்கும் சூரியன்
இந்தியாவில் பிப்ரவரி மாத இறுதியில் இருந்தே சூரியன் சுட்டெரிக்க துவங்கிவிட்டது. மத்திய இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வெப்ப அலை கடுமையாக வீசிவருகிறது. அண்டை மாநிலங்களில் மதியம் 12 மணிமுதல் 4 மணிவரையில் மக்கள் வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம், கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவானதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
உயர்ந்த வெப்பநிலை
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வுமையம் அளித்த தரவுகளின் அடிப்படையில், 1901-ம் ஆண்டுக்கு பிறகு அதிகபட்ச வெயில் அளவு சென்ற மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
இதன்படி, கடந்த 2022 மார்ச் மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலை 33.1 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 20.24 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகியுள்ளது. இது மார்ச் மாதத்தில் நிலவும் சராசரி கோடை வெப்ப நிலையை விட 1.86 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். இந்த ஆண்டு மலை பிரதேசங்களில் கூட சராசரிக்கு அதிகமாக வெயில் பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பாக கடந்த 2010 ஆம் ஆண்டு, சராசரி வெப்பநிலை 33 டிகிரி செல்ஸியஸாக பதிவானது குறிப்பிடத்தக்கது.
முன்னறிவிப்பு
இந்நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான முன்னறிவிப்பை இந்திய வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு உள்ளிட்ட தெற்கு தீபகற்ப பகுதியில் ஏப்ரல் மாதத்தில் வெப்பம் இயல்பை ஒட்டியும், இயல்பை விட குறைவாகவும் இருப்பதற்கான சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ,வடமேற்கு, மத்திய மற்றும் சில வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.