"இடம் தானே அவங்களுக்கு வேணும்.. என் வீட்டை வேற இடத்துக்கு தூக்கிட்டு போய்டுறேன்".. சொன்னதை செஞ்சுகாட்டிய விவசாயி.. வாயடைச்சுப்போன மக்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபஞ்சாப்பில் விவசாயி ஒருவர் தனது கனவு வீட்டை இடிக்க மனமில்லாமல் அதனை வேறு இடத்திற்கு நகர்த்தி கொண்டுசென்றிருக்கிறார். இதற்காக ஏராளமான தொகையையும் அவர் செலவழித்திருக்கிறார்.

பஞ்சாப் மாநிலத்தின் சங்ரூர் மாவட்டத்தில் உள்ள ரோஷன்வாலா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுக்விந்தர் சிங் சுகி. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தனது கிராமத்தில் வீடு ஒன்றை கட்டியுள்ளார். தன்னுடைய கனவு வீட்டை பார்த்து பார்த்து காட்டியிருக்கிறார் சிங். இதற்கு 1.5 கோடி ரூபாய் செலவாகியிருக்கிறது. சுமார் 3000 சதுர அடியில் அவரது வீடு கட்டப்பட்டிருக்கிறது. ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு அவரை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
ரயில்வே விரிவாக்கம்
சுக்விந்தர் சிங்கின் கனவு இல்லம் அமைந்துள்ள வழியாகவே டெல்லி-அமிர்தசரஸ்-கத்ரா எக்ஸ்பிரஸ்வே திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதனால் அந்த இடத்தை அதிகாரிகள் கோரியுள்ளனர். இதற்காக இழப்பீட்டு தொகை வழங்குவதாகவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. இந்த பிரம்மாண்ட ரயில்வே பாதை ஹரியானா, பஞ்சாப் மற்றும் ஜம்மு & காஷ்மீர் வழியாக செல்கிறது. டெல்லி-கத்ரா விரைவுச்சாலையானது, டெல்லியில் உள்ள பஹதுர்கர் எல்லையை இணைக்கும் அதேவேளையில், எட்டு வழிச்சாலையாக விரிவாக்கக்கூடிய அங்கீகரிக்கப்பட்ட சேவையாகும். இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் 2020 ஆம் ஆண்டு துவங்கியது.
நகர்ந்துபோன வீடு
இதனால் கவலையடைந்த சுக்விந்தர் சிங், தனது வீட்டை வேறு இடத்துக்கு நகர்த்த முடிவெடுத்திருக்கிறார். அதன்படி தனியார் நிறுவனத்தை அணுகியுள்ளார் அவர். இதன்படி வீடு ஹைடிராலிக் கருவிகள் மூலம் நகர்த்தப்பட்டிருக்கிறது. தற்போதைய நிலையில் பழைய இடத்தில் இருந்து 500 அடி தொலைவில் வீடு நகர்த்தப்பட்டிருக்கிறது. இதுபற்றி பேசிய சுக்விந்தர் சிங்,"நான் இரண்டு ஆண்டுகளில் பெரும் தொகையை செலவழித்தேன், புதிய வீடு கட்ட விரும்பவில்லை. ஆரம்பத்தில், வீடு அதன் இடத்தில் இருந்து 250 அடி நகர்த்தப்பட்டது. அதன்பின்னர் மேலும் 250 அடி நகர்த்தப்பட்டது. இதற்கு நிறைய பணியாளர்களின் உழைப்பு தேவைப்பட்டது. அவர்கள் இல்லையென்றால் இது சாத்தியமில்லை" என்றார்.
இதுவரையில் இந்த பணிகளுக்காக அவர் 50 லட்ச ரூபாய் செலவழித்திருக்கிறார். தனது கனவு வீட்டை காப்பாற்ற சுக்விந்தர் எடுத்த துணிச்சலான முடிவு அந்த கிராம மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
