அவங்க சொன்னத நம்பி தான் பூஜை 'ரூம்'ல வச்சேன்...! கடைசியில 'அதுக்குள்ள' என்ன இருந்துச்சு தெரியுமா...?' 'சதுரங்க வேட்டை' பாணியில் நடந்த மோசடி சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Feb 12, 2020 12:01 PM

அள்ள அள்ள குறையாத தங்கப் புதையல் தரும் அட்சயப்பாத்திரம் வைத்திருப்பதாக ஏமாற்றி தொழில் அதிபரிடம் 2 கோடி ரூபாயை பறித்த ஆந்திர, கர்நாடக மோசடி கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Eight people arrested for allegedly defrauding on golden treasure

திருப்பத்தூரை சேர்ந்த தொழில் அதிபர் நவீன் என்பவரை டேப் சுற்றப்பட்ட அட்டைப் பெட்டியுடன் சந்தித்த 8 பேர் கொண்ட கும்பல், தங்களிடம் தங்க புதையலை அள்ளித்தரும் அட்சய பாத்திரம் ஒன்று கைவசம் இருப்பதாகவும், அதனை வைத்து கிலோ கணக்கில் தங்கப் புதையலை அள்ளலாம் என்று 'டன்' கணக்கில் கதை அளந்து விட்டுள்ளனர்.

மேலும் அவரை சித்தூர் அருகே ஒரு பகுதிக்கு அழைத்துச்சென்று நம்ப வைக்கும் விதமாக, தாங்கள் ஏற்கனவே பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்த சில தங்க நகைகளை எடுத்துக்காட்டி சதுரங்க வேட்டை பட பாணியில் நவீனுக்கு ஆசை காட்டி மூளைச் சலவை செய்துள்ளனர்.

தன் கண்கள் முன்னே தங்க நகைகளை புதையல் போல எடுப்பதை பார்த்து உண்மை என்று நம்பி ஏமாந்து போன தொழில் அதிபர் நவீன், 2 கோடியே 10 லட்சம் ரூபாயை அந்த கும்பலிடம் விலையாக கொடுத்து தங்க புதையல் தரும் அட்சயபாத்திரம் இருப்பதாக கூறப்பட்ட பெட்டியை வாங்கியுள்ளார். அந்த பெட்டியை பூஜையில் வைத்து திறந்து பார்த்தால் இன்னும் அதிக தங்கப் புதையல் கிடைக்கும் என்று அந்த கும்பல் சொன்னதை நம்பி பூஜையில் வைத்துள்ளார்.

சில தினங்கள் கழித்து அட்சயப்பாத்திரத்தை திறந்து பார்த்தால் உள்ளே  வெறும் அட்டைப் பெட்டி மட்டும் தான் இருந்தது..!

இருந்தாலும் ஏதாவது தொழில்நுட்ப கோளாறாக இருக்குமோ என்று எண்ணி அந்த பெட்டியுடன் சில இடங்களுக்கு சென்று பெட்டிக்குள் கைவிட்டு தங்க புதையலை தேடினார். எவ்வளவு தேடியும் அம்மஞ்சல்லிக்கு பிரயோஜனம் இல்லை என்பதை அதன் பின்னரே உணர்ந்து, தான் ஏமாற்றப்பட்டதை உறுதிப்படுத்திக் கொண்டார் நவீன். சித்தூர் அருகே குடிப்பள்ளியில் உள்ள ஒருவரது வீட்டில் வைத்து பணம் கொடுக்கப்பட்டதால் குடிப்பள்ளி காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது.

தனிப்படை அமைத்து அட்சய பாத்திர மோசடி கும்பலை சில மாதங்களாக தேடிவந்த காவல்துறையினர் 8 பேர் கொண்ட கும்பலை குடிப்பள்ளி ரெயில் நிலையம் அருகே சுற்றி வளைத்தனர். ஒவ்வொருவர் வீட்டில் இருந்தும் கட்டு கட்டாக 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை பறிமுதல் செய்தனர். மொத்தம் ஒரு கோடியே 29 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது அதன் உடன் 18 லட்சம் மதிப்புள்ள இனோவா கார் ஒன்றும், 2 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றும் 80 ஆயிரம் மதிப்புள்ள இருசக்கர வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.

மண்ணுளி பாம்பு, இரிடியம், பெட்ரோமாக்ஸ் லைட், ரைஸ் புல்லிங் வரிசையில் தற்போது தங்கப் புதையல் தரும் அட்சயப்பாத்திரம் மோசடி அம்பலத்துக்கு வந்துள்ளது.

.

Tags : #FRAUD