"பெத்த அம்மாவை பாத்துக்க முடியாது..ஆனா அவங்க சொத்துமட்டும் வேணுமா?"..விளாசிய நீதிபதிகள்..அடுத்து வெளிவந்த அதிரடி தீர்ப்பு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதாயை பார்த்துக்கொள்ள போதிய இடம் இல்லை என உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற ஒருவரிடம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளனர் நீதிபதிகள்.
வைதேகி சிங்
பீகாரில் உள்ள முசாபர்பூர் பகுதியை சேர்ந்தவர் வைதேகி சிங். 89 வயதான இவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். திருமணமாகி சென்றுவிட்ட இரு மகள்களும் அவ்வப்போது வந்து தாயை பார்த்துச்செல்வது வழக்கம். இந்நிலையில் சமீபத்தில் வைதேகி சிங்கிற்கு டிமென்ஷியா என்னும் மறதி நோய் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் 89 வயதான வைதேகி சிங் அவரது மகனால் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் தன் சகோதரிகளான புஷ்பா திவாரி மற்றும் காயத்ரி குமார் ஆகியோரை தாயை பார்க்க அனுமதிக்கவில்லை. மேலும் தங்களிடம் சொல்லாமல் வேறு இடத்திற்கு வயதான தாயை கொண்டு சென்று விட்டதாக சகோதரிகள் இருவரும் மார்ச் மாதம் ஹேபியஸ் கார்பஸ் மனுத் தாக்கல் செய்தனர்.
இதனையடுத்து, முஸாபர்பூரில் வைதேகி சிங் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
நீதிமன்றம்
பெற்ற தாயை பார்க்க தங்களை அனுமதிக்குமாறு வைதேகி சிங்கின் மகள்கள் உச்ச நீதிமன்றத்தை நாடிய நிலையில், மருத்துவ பரிசோதனை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டனர் நீதிபதிகள். இதனை தொடர்ந்து சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் வைதேகி சிங்கிற்கு முதிர்நிலை டிமென்ஷியா இருப்பதாகவும் வாய் அசைவுகள் மற்றும் உடல்மொழி குறித்த புரிதல் அவருக்கு இல்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, வைதேகி சிங்கிற்கு சொந்தமான அசையும் அல்லது அசையா சொத்துகள் தொடர்பான எந்தவொரு பரிவர்த்தனைக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. தாயின் உடல்நலம் மற்றும் மருத்துவத் தேவைகளைக் கவனிக்க மகள்களை அனுமதிப்பது குறித்து செவ்வாய்க்கிழமைக்குள் பதிலளிக்குமாறு மகனுக்கு உத்தரவிட்டது.
இடமில்லை
இந்நிலையில், "மகள்கள் தங்களது குடும்பத்தோடு வசித்துவருவதால் தாயை வீட்டில் வைத்து பார்த்துக்கொள்ள போதிய இடமில்லை" என நீதிமன்றத்தில் மகன் தெரிவித்திருக்கிறார். இதற்கு ஆட்சேபனை தெரிவித்த நீதிபதிகள் தனஞ்சய ஒய் சந்திரசூட் மற்றும் சூர்யா காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு “உங்களிடம் எவ்வளவு பெரிய வீடு உள்ளது என்பது கேள்வி அல்ல. ஆனால் உங்கள் தாயைக் கவனித்துக் கொள்ள எவ்வளவு பெரிய இதயம் உள்ளது என்பதே கேள்வி” என்று தெரிவித்தனர்.
மேலும் பேசிய நீதிபதிகள் “உங்களிடம் அந்த இதயம் இல்லை. இது நம் நாட்டில் மூத்த குடிமக்களின் சோகம். தாயாருக்கு கடுமையான மறதிநோய் உள்ளது. ஆனால் அவருடைய எல்லா சொத்துகளையும் நீங்கள் விற்கிறீர்கள். அவரது கட்டைவிரல் பதிவைப் பெற கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளீர்கள். அவருடைய சொத்துக்கள் தொடர்பான அனைத்து மேலதிக பரிவர்த்தனைகளையும் நாங்கள் நிறுத்துகிறோம். தாயின் பொறுப்பை மகள்கள் ஏற்கட்டும்” என உத்தரவிட்டனர்.
தாயை பார்த்துக்கொள்ள போதிய இடமில்லை என உச்ச நீதிமன்றத்தில் மகன் தெரிவித்திருந்த வேளையில், நீதிபதிகள் மகள்களே பொறுப்பை ஏற்கும்படி தீர்ப்பளித்தது பலராலும் வைரலாக பேசப்பட்டுவருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8