‘பார்த்தாலே கண் கலங்குதே’.. அழுது அழுதே மன நோயாளியான அம்மா.. பெத்தவங்கள இப்படி விட எப்படி மனசு வருதோ.. மனதை ரணமாக்கிய சோகம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெற்ற பிள்ளைகள் கைவிட்டதால் மூன்று ஆண்டுகளாக பயணியர் நிழல் கூடத்தில் வயதான தம்பதியர் தங்கியிருக்கும் வீடியோ கண்கலங்க வைத்துள்ளது.

திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம் சிறுவைகுண்டபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவர் நாகப்பன் (வயது 78). இவரது மனைவி காந்தம்மாள் (வயது 70). இந்த தம்பதிக்கு ராஜா என்ற ஆண் பிள்ளையும், லட்சுமி என்ற பெண் பிள்ளையும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி அவரவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
கைவிட்ட பிள்ளைகள்
முதியவர் நாகப்பன் அப்பகுதியில் பனைமரம் ஏறும் தொழிலை செய்து வந்துள்ளார். தற்போது வயது முதிர்வு காரணமாக அவரால் முன்பு போல் பனை மரம் ஏற முடியவில்லை. மேலும் உடலும் பலவீனம் அடைந்ததால் வேறு எந்த தொழிலும் செய்ய முடியவில்லை. அதனால் கணவன், மனைவி இருவரும் உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வந்துள்ளனர். இதனால் மனைவி காந்தம்மாளின் உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. இவர்களது பிள்ளைகளும் எந்தவித உதவியும் செய்யவில்லை என கூறப்படுகிறது.
மனநோயாளியாக மாறிய மனைவி
இதனை அடுத்து உறவினர்களிடம் உதவி கேட்டுள்ளனர். ஆனால் அவர்களும் உதவி செய்ய முன்வரவில்லை என சொல்லப்படுகிறது. இதில் மனவேதனை அடைந்த காந்தம்மாள் அழுது கொண்டே இருந்ததால் மனநோயாளியாக மாறியதாக முதியவர் நாகப்பன் கண்ணீர் மல்க கூறியுள்ளார். பெற்ற பிள்ளைகள், சொந்தபந்தங்கள் என அனைவரும் கைவிட்டதால் மனமுடைந்த தம்பதியினர், அங்கிருந்து வேறு ஊருக்கு நடந்தே செல்ல ஆரம்பித்துள்ளனர். வழியில் கிடைக்கும் இடங்களில் தங்கி, வழிப்போக்கர்கள் கொடுக்கும் உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்து வருகின்றனர்.
உடல்நிலை பாதிப்பு
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி ரயில் நிலையம் அருகே சில காலம் தங்கியுள்ளனர். அப்போது மனைவி காந்தம்மாளுக்கு மேலும் உடல்நிலை பாதிக்கப்பட்டு கை, கால்கள் சற்று செயலிழந்து போயுள்ளது. இதனால் அவரால் அதிக தூரம் நடக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
வீடான நிழல் கூடம்
இதனை அடுத்து அருகில் பயன்படுத்தப்படாமல் உள்ள பயணியர் நிழல் கூடத்தில் இருவரும் தங்க ஆரம்பித்தனர். இப்படியே சுமார் 3 ஆண்டுகள் அங்கு தங்கி இருப்பதாக முதியவர் நாகப்பன் வேதனையுடன் கூறியுள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும், அந்த வழியே செல்லும் பயணிகள் பலரும் இவர்களுக்கு உணவளித்து உதவி வருகின்றனர்.
தமிழக அரசுக்கு வேண்டுகோள்
என்ன ஆனாலும் தனது மனைவியை சாகும் வரை கைவிடமாட்டேன் என முதியவர் நாகப்பன் உருக்கமாக கூறியுள்ளார். இந்த நிலையில், தாங்கள் தங்குவதற்கு ஒரு இடமும், உணவுக்கும் வழிவகை செய்திட வேண்டும் என்று தமிழக அரசுக்கு முதிய தம்பதியினர் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். பெற்ற பிள்ளைகள் கைவிட்டதால், வயதான தம்பதியினர் நிழல் கூடத்தில் தங்கி வரும் சம்பவம் காண்போரை கலங்க செய்துள்ளது.

மற்ற செய்திகள்
