என்ஜினியரே.. உங்க வீட்ல யாராவது ஒருத்தர் சாக போறாங்க.. ஆன்லைனில் வந்து சொன்ன பெண் ஜோதிடர்.. இப்படி ஒரு திட்டமா?
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிரா: மகாராஷ்டிராவில் வீட்டில் சூனியம் இருப்பதாகவும், அதை எடுத்து விடுவதாகவும் கூறி ரூ.7 லட்சம் பணத்தை ஏமாற்றிய போலி பெண் ஜோதிடரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலம் சின்ச்வாத்தை சேர்ந்த 52 வயது என்ஜினீயர் ஒருவர் வெளிநாட்டு உற்பத்தி நிறுவனம் ஒன்றில் உயர்ந்த பதவியில் பணிபுரிந்து வருகிறார். மாந்திரீகத்தில் நம்பிக்கையுள்ள என்ஜினீயரின் குடும்பம் வேறு இடத்திலுள்ள ஒரு பெண் ஜோதிடரை ஆன்லைனில் தொடர்பு கொண்டுள்ளனர். ஜோதிடரின் ஏமாற்று பேச்சில் மயங்கிப்போன குடும்பம் அவரிடம் வீட்டில் இருக்கும் தீராத பிரச்சனைகளை சொல்லி புலம்பியுள்ளனர்.
வீட்டில் பிரச்சனைகள்:
நல்ல வசதியான என்ஜினீயரின் குடும்பம் வீட்டிலுள்ள பிரச்னைகளை சரி செய்ய எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய தயாராக இருப்பதை புரிந்துகொண்ட பெண் ஜோதிடர், அவருடைய வீட்டிற்குள் யாரோ ஒருவர் சூனியம் வைத்திருப்பதாகவும், அதனால்தான் வீட்டில் பிரச்னைகள் நடப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், தான் சொல்லும் பரிகாரங்களை முறையாக செய்யாமல் போனால் வீட்டில் யாரேனும் இறந்து விடுவார் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய என்ஜினியர் குடும்பம் அச்சத்தில் உறைந்துள்ளது..
தொடர்பு துண்டிப்பு:
போலி ஜோதிடரின் வலையில் சிக்கி அவரின் பேச்சை முழுமையாக நம்பிய என்ஜினீயர் குடும்பம் ஆன்லைனில் அவர் சொன்ன பரிகாரங்களை முறையாக வீட்டில் செய்திருக்கின்றனர். மேலும், சூனியத்தை எடுப்பதற்காக அவர் சொன்ன பணத்தையும் அனுப்பியுள்ளனர். கடந்த வருடம் நவம்பர் மாதம் மற்றும் இந்த ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி என பல தவணைகளாக ரூ.7.21 லட்சம் பணத்தையும் அனுப்பியுள்ளனர்.
பணத்தை வாங்கிக்கொண்டு போலி பெண் ஜோதிடர் முழு பரிகாரத்தையும் கூறாமல் என்ஜினீயர் குடும்பத்தின் தொடர்பை முற்றிலுமாக துண்டித்து கொண்டார். அதன்பிறகு தான் தங்கள் குடும்பமே முழுமையாக நம்பிய பெண் ஜோதிடர் போலி என்று தெரிய வந்துள்ளது.
போலீசார் வலைவீச்சு:
பணத்தை இழந்து இப்படி ஏமாந்து விட்டோமே என என்ஜினீயர் இதுகுறித்து சின்ச்வாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மகாராஷ்டிரா தடுப்பு மற்றும் மனித தியாகம் மற்றும் பிற மனிதாபிமானமற்ற, தீய மற்றும் அகோரி நடைமுறைகள் மற்றும் மந்திரவாத தடுப்பு சட்டம், 2013 மற்றும் இந்திய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் போலி பெண் ஜோதிடரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

மற்ற செய்திகள்
