லவ்வர பாக்கணும்,,, "இந்தா பாகிஸ்தான் வரைக்கும் போயிட்டு வரேன்"... 'ஜிபிஎஸ்' உதவியுடன் கிளம்பிய இந்திய 'இளைஞர்'... எல்லையில் ஏற்பட்ட பரபரப்பு!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த சில நாட்களுக்கு முன்னர், இந்தியா - சீனா எல்லை விவகாரம் தொடர்பான பிரச்சனைகள், நடைபெற்ற தாக்குதல்கள் என அனைத்தும் இந்திய மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருந்தது. இந்நிலையில், இந்திய இளைஞர் ஒருவர், தனது காதலியை காண பாகிஸ்தான் செல்ல முயற்சி செய்து இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் சிக்கிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் உஸ்மானாபாத் பகுதியை சேர்ந்த சித்தி முகமது ஜிஷன் என்ற 20 வயது இளைஞர் ஒருவர் தான் தனது காதலியை பார்க்க வேண்டி எல்லைக்கு கிளம்பியவர். இவர் பொறியியல் படித்து வரும் நிலையில், பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஷா பைசல் நகரில் வசிக்கும் சாம்ரா என்ற பெண்ணுடன் பேஸ்புக் மூலம் நட்பாகி உள்ளார். பின்னர் இருவரும் காதலிக்க ஆரம்பித்துள்ள நிலையில், சுமார் 1200 கி.மீ தொலைவில் இருக்கும் தனது காதலியை காண இளைஞர் ஜிஷன் முடிவு செய்துள்ளார்.
தனது சொந்த ஊரான மகாராஷ்டிராவில் இருந்து இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தி கிளம்பிய இளைஞர், கூகுள் மேப் உதவியுடன் குஜராத் பகுதியின் ரான் ஆஃப் கட்ச் பகுதியை அடைந்துள்ளார். அங்கு தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திய ஜிஷன், பின் நடந்தே இந்தியா - பாகிஸ்தான் எல்லையை கடந்து கராச்சி செல்ல முடிவு செய்துள்ளார். கொஞ்ச தூரம் நடந்து சென்ற நிலையில், அவருக்கு அப்போது ஏற்பட்ட நீரிழப்பு காரணமாக அவர் மயக்கமடைந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள், இளைஞரை மீட்டு அவரிடம் நடத்திய விசாரணையில், கராச்சியில் உள்ள தனது காதலியை காண ஜிஷன் முயற்சி செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து, அவரை கைது செய்த வீரர்கள், அவரது அடையாள அட்டைகள் மூலம் இளைஞர் குறித்து குடும்பத்தாரிடம் தகவல் தெரிவித்தனர்.
முன்னதாக, அந்த இளைஞரை காணவில்லை என அவரது பெற்றோர்கள் போலீசாரிடம் புகாரளித்திருந்தனர். எல்லையில் சுமார் ஒன்றரை கிலோமீட்டருக்கு முன் இளைஞரை வீரர்கள் தடுத்து நிறுத்தினர். கடந்த 2012 ஆம் ஆண்டு இதே போன்று இந்திய வாலிபர் ஒருவர் பாகிஸ்தானுக்கு எல்லையை கடந்து சென்றுள்ளார். அப்போது அவரை கைது செய்த பாகிஸ்தான் போலீசார், சுமார் ஆறு வருடங்கள் கழித்து விடுதலை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.