பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் காட்டுத்தீயாக பரவும் கொரோனா!.. 10 ஆக உயர்ந்த எண்ணிக்கை!. அறிகுறியின்றி தொற்று உறுதியானதால் பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > உலகம்பாகிஸ்தானில் கொரோனா பாதித்த கிரிக்கெட் வீரர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வடைந்து உள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் விளையாடுகிறது. வீரர்கள் புறப்படுவதற்கு முன்பாக அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனையில், ஷாதப் கான், ஹைதர் அலி, ஹரீஷ் ராஃப் ஆகிய மூன்று வீரர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேற்று தெரிவித்தது.
இவர்கள் மூன்று பேருக்கும் அறிகுறிகள் எதுவும் இல்லை என்றும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவுடன், அவர்கள் சுய தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.
இந்நிலையில், மீதமுள்ளோருக்கு நடந்த பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகின. இதுபற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்தியில், இம்ரான் கான், காஷிப் பாட்டி, முகமது ஹபீஸ், முகமது ஹஸ்னைன், முகமது ரிஸ்வான், பகர் ஜாமன் மற்றும் வஹாப் ரியாஸ் ஆகிய கிரிக்கெட் வீரர்கள் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது. இதனால் மொத்தம் 10 வீரர்களுக்கு பாதிப்பு உள்ளது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, அவர்கள் அணியில் இடம்பெற்று போட்டிகளில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.