'இனி நோ வெயிட்டிங்'... ஸ்விக்கி, சொமாட்டோவுக்கு போட்டியாக... களத்தில் குதிக்கும் 'பிரபல' நிறுவனம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய நாட்டின் மிகப்பெரிய சந்தையாக திகழும் உணவு டெலிவரியில் ஸ்விக்கி, சொமாட்டோ, புட் பாண்டா ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே கோலோச்சி வருகின்றன. சமீபத்தில் சொமாட்டோ நிறுவனம், உபேர் ஈட்ஸ் நிறுவனத்தை மிகப்பெரிய தொகை கொடுத்து விலைக்கு வாங்கியது. இதனால் ஸ்விக்கி, சொமாட்டோ இரு நிறுவனங்களும் ஒன்றுக்கொன்று பலத்த போட்டியாளர்களாக திகழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் வருகின்ற மார்ச் மாதம் முதல் அமேசான் நிறுவனமும் உணவு டெலிவரியில் குதிக்க இருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த ஆண்டில் இதுகுறித்த செய்திகள் தொடர்ந்து வெளியாகி வந்தன. கடைசியாக தீபாவளிக்கு அமேசான் களமிறங்குவது நிச்சயம் என கூறப்பட்டது. ஆனால் அதற்குப்பின் அமேசான் உணவு டெலிவரியில் இறங்குவது தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் தற்போது பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு அமேசான் நிறுவனம் இயங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதில் சுவாரசியம் என்னவெனில் ஸ்விக்கி நிறுவனமும் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருவது தான். மிகப்பெரியளவில் வாடிக்கையாளர்களை ஈர்த்திருந்தாலும், 2 பில்லியன் டாலர்களை திரட்டி இருந்தாலும் இரண்டு நிறுவனங்களும் (ஸ்விக்கி, சொமாட்டோ) இன்னும் பெரியளவில் லாபம் ஈட்டவில்லை என கூறப்படுகிறது.
இதனால் ஸ்விக்கி, சொமாட்டோ நிறுவனங்கள் தள்ளுபடிகளை குறைத்து லாபத்தை அதிகரிக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றன. இந்த சமயத்தில் அமேசான் நிறுவனம் உணவு டெலிவரியில் நுழைவது மேற்கண்ட நிறுவனங்களுக்கு பலத்த போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் சொமாட்டோ நிறுவனம் உணவகங்களுடன் பார்ட்னர்ஷிப் அமைப்பதில் தற்போது திணறிக்கொண்டு இருக்கிறது.
ஒருவேளை மார்ச்சில் அமேசான் உணவு டெலிவரியில் களமிறங்கினால் ஸ்விக்கி, சொமாட்டோ நிறுவனங்கள் மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு ஆபர்களை வாரிவழங்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். ஏனெனில் அமேசான் இதற்காக சுமார் 3500 கோடிகள் வரை ஒதுக்கவிருப்பதாக கூறப்படுகிறது.