'ரொம்ப நனஞ்சுட்டீங்க போல, சூடா ஒரு டீ சாப்ட்றீங்களா...?' 'எனக்கு பைக் ஓட்டுறது ரொம்ப பிடிக்கும்...' நம்பிக்கை பெண்மணியின் சாதனை...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆண்களைப் போல அனைத்துத் துறைகளிலும் சாதனை புரிந்து வரும்பெண்கள் மத்தியில், மேலும் ஒரு பெண்மணி உணவு டெலிவரி செய்யும் பணியில் இறங்கி சாதனை படைத்துள்ளார்.
கடந்த ஒரு வருடமாக ஸ்விக்கியில் பணி செய்து வரும் சுதா கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்தவர். இந்தியாவில் ஸ்விக்கியில் அதிக ஆர்டர்களை டெலிவரி செய்த பெண் ஊழியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
2019-ஆம் ஆண்டின் இறுதியில் பணியில் சேர்ந்த இவர் இதுவரை 6,838 ஆர்டர்களை வெற்றிகரமாக முடித்துள்ளார். முதலில் அவருக்கு வயது சற்று அதிகமாக இருப்பதால் இந்த பணியில் நம்மை சேர்த்துக் கொள்வார்களா என்ற சந்தேகத்தில் சென்றுள்ளார்.. இருப்பினும் தன்னம்பிக்கையுடன் அவர் திறமையாகப் பேசி நேர்காணலை நிறைவு செய்து வேலையைப் பெற்றார்.
பணியில் அதிக ஈடுபாடு காட்டிய அவர் மிகவும் விரைவாக வேலையை செய்து முடித்தார். 'எனது மனதுக்கு பிடித்த வேலையை செய்கிறேன். பைக் ஓட்டுவது எனக்கு பிடிக்கும். அதனால் எனக்கு வேலை எளிதாக இருக்கிறது.' என்கிறார் இந்த சாதனை பெண்மணி.
முதலில் இந்த வேலையை ஏற்றுக்கொள்ள எனது குடும்பத்தினர் சம்மதிப்பார்களா? என்ற சந்தேகம் இருந்தது. அம்மா மிகவும் தயங்கினார். ஆண்களால் செய்யக்கூடிய வேலை அது என்று கூறினார். இருப்பினும் ஒப்புக்கொண்டார். இன்று என்னைப்பார்த்து அவர்கள் பெருமைப்படுகிறார்கள்' என்று தெரிவித்தார்.
சுதா, தன் தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வருகிறார். பி.காம் பட்டதாரி. கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் டிப்ளோமா முடித்துள்ளார். பல நிறுவனங்களில் பணிபுரிந்த அவர் 2015-ம் ஆண்டில் ஒரு விபத்தை சந்தித்ததன் விளைவாக கட்டாய ஓய்வு எடுக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார். பின்னர் வேலை கிடைக்காமல் இருந்து, இறுதியாக ஸ்விக்கியில் இணைந்தார்.
'சென்ற பருவமழை காலத்தில் கொட்டும் மழையில் நான் ஒரு ஆர்டரை வழங்க வேண்டியிருந்தது. வாடிக்கையாளரின் இருப்பிடத்தை அடைந்த நான், முற்றிலும் நனைந்து நடுங்கினேன். நான் வாசலில் நனைந்து கொண்டிருந்ததைப் பார்த்து வீட்டில் இருந்து வந்த பெண் ஒருவர் என்னிடம் ஒரு துண்டைக் கொடுத்ததுடன், சூடாக டீ வேண்டுமா என்று கேட்டார். அன்றைய தினம் எனக்கு மிகவும் நிறைவாக இருந்தது.' என்று தெரிவித்துள்ளார்.
இந்த நம்பிக்கை பெண்மணியின் சாதனையை அனைவரும் வாழ்த்தி பாராட்டுகின்றனர்.