நீ எப்போ 'அக்கா' ஊருக்கு வருவ...? 'காபுல் ஏர்போர்ட்'க்கு வந்து பல நாளாச்சு...! - கேரளாவில் 'கண்ணீரோடு' காத்திருக்கும் குடும்பம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரியான தன் சகோதரி, காபூல் விமான நிலையத்தில் பல நாட்கள் தவித்து வருவதாக அவரின் சகோதரர் கூறியுள்ளார்.
ஆப்கானை தாலிபான் கைப்பற்றிய சூழலில் கடந்த ஒரு வாரமாக அங்கு அசாதாரமான சூழ்நிலை நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானில் இருக்கும் வெளிநாட்டவர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பி வரு சூழலில், ஆப்கான் மக்களும் வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்று வருகின்றனர்.
இதனால், காபூல் விமான நிலையத்தில் பல நாட்களாக கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் காபூல் விமான நிலையத்தில் பல நாட்கள் காத்திருப்பதாக அவரின் சகோதரர் கூறியுள்ளார்.
கேரளா மாநிலம் காசர்கோடு அருகில் உள்ள பெலா பெரியட்கா பகுதியை சேர்ந்தவர் தெரசா கிராஸ்டா (Theresa Crasta) என்னும் கன்னியாஸ்திரி காபூலில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளி ஒன்றில் பணியாற்றி வந்தார்.
தாலிபான்கள் காபூலை நெருங்கி வரும் சமயமே தெரசா கிராஸ்டா தான் இந்தியாவுக்கு திரும்புவதற்காக ஆகஸ்ட் 17-ஆம் தேதி விமான டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். ஆனால், தாலிபான்கள் 15-ஆம் தேதி, காபூலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர்.
இதனால் தெரசா தான் தங்கியிருந்த பகுதியிலேயே இருக்க வேண்டிய சூழலுக்கு ஆளானார். தாலிபான்களின் பல செக்போஸ்ட்களை தாண்டி விமான நிலையத்துக்கு சென்றாலும் உள்ளே செல்லமுடியாத அளவிற்கு நிலையத்துக்குள் ஏராளமானோர் கூடியுள்ளனர். தன் சகோதரியை மீட்டு தருமாறு சகோதரர் ஜான் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.