'ஒரு வயசு பையனின் மனதில் பதிந்த விஷயம்'... 'விடாமல் நடந்த தேடல்'... இளைஞரின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாசில நேரங்களில் சினிமாவை மிஞ்சிய சம்பவங்கள் வாழ்க்கையில் நடந்து விடுகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் கேரளாவில் நடந்துள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் விதுரா பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின். 22 வயதான இவர் பிறந்த ஒரு ஆண்டிலேயே இவரது தந்தைக்கும், தாய்க்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து சென்று விட்டார்கள். சில வருடங்களிலேயே அஸ்வினின் தந்தை தற்கொலை செய்து கொண்ட நிலையில், தந்தை வழி பாட்டியான விசாலாட்சியின் பராமரிப்பில் அஸ்வின் இருந்துள்ளார்.
இந்த நிலையில் 16ம் வயதில் தமது பாட்டியை இழந்துள்ளார் அஸ்வின். பாட்டியின் மறைவுக்குப் பின்னர் மொத்தமாக ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். பத்தாம் வகுப்பில் 70% மதிப்பெண்களுடன் வெற்றிபெற்ற அஸ்வின், தனது சந்தோசத்தை கொண்டாட யாரும் இல்லாமல் தனிமையில் தவித்து வந்துள்ளார். மேற்கொண்டு படிக்க முடியாமல் தவித்த அஸ்வின், தான் ஒரு மிகப்பெரிய மேஜிக் நிபுணராக வர வேண்டும் என்ற ஆர்வத்தில் கேரளாவின் பிரபல மேஜிக் நிபுணர் கோபிநாத் முதுகாடு நிறுவனத்தில் சேர முயற்சி செய்தார்.
ஆனால் கோபிநாத் முதுகாடின் நிறுவனத்தில் வாய்ப்பு தேடிச்சென்ற அவருக்கு முதலில் ஏமாற்றமே மிஞ்சியது. இருப்பினும் நம்பிக்கை இழக்காத அஸ்வின், திருவனந்தபுரம் நகரிலேயே தங்கியிருந்து, பிழைப்புக்காக காலியான பீர் பாட்டில்களை சேகரித்து விற்று வந்துள்ளார். இந்த நிலையில் 2016ல் முதுகாடு நிறுவனத்திலிருந்து அஸ்வினுக்கு, அவரது வாழ்க்கையை மாற்றியமைக்கப்போகும் அந்த அழைப்பு வந்துள்ளது.
தான் ஆசைப்பட்டது போலவே கோபிநாத் முதுகாடின் நிறுவனத்தில் அஸ்வின் வேலைக்குச் சேர்ந்த கையேடு, தனது தாயைத் தேடும் பணியையும் தீவிரமாகச் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஒரு அகதிகள் முகாமில் 44 வயதான லதா தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.
பல வருடங்கள் கழித்து தனது தாயாரை நேரடியாகப் பார்க்கப் போகிறோம் என்ற ஆசையில் அஸ்வின் சென்ற நிலையில், அவரது தாயாருக்கு அஸ்வினை அடையாளம் தெரியவில்லை. இருப்பினும் பல வருடப் போராட்டத்திற்குப் பின்னர் தனது தாயைக் கண்டுபிடித்த நிலையில் அவருக்கு நல்ல சிகிச்சை அளித்து, இனி இருக்கப் போகும் நாட்களை அவருடன் மகிழ்ச்சியாக இருக்கப் போவதாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.