சொத்து, நகை அனைத்தையும் ராகுல் காந்திக்கு எழுதி கொடுத்த பாட்டி.. என்ன காரணம் தெரியுமா?
முகப்பு > செய்திகள் > இந்தியா78 வயதான மூதாட்டி ஒருவர் தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் ராகுல் காந்திக்கு எழுதிக் கொடுத்த சம்பவம் பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்தவர் புஷ்பா முஞ்சால். 78 வயதாகும் இவர் ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்கிறார். இந்நிலையில் தன்னிடம் உள்ள சொத்துக்களை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எழுதி வைப்பதாக கூறி அது தொடர்பாக மாவட்ட நீதிமன்றத்தில் உயில் எழுதியுள்ளார்.
ஒப்படைக்கப்பட்ட உயில்
இதனை அடுத்து இந்த உயிலை ராகுல் காந்தி சார்பில் முன்னாள் உத்திரகாண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் பிரீதம் சிங் பெற்றுக்கொண்டார். இதுகுறித்து டேராடூன் மாநகர காங்கிரஸ் தலைவர் லால் சந்த் ஷர்மா கூறுகையில்," உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் பிரீதம் சிங் வீட்டில் புஷ்பா முஞ்சால் தனது உயிலை ஒப்படைத்தார்" என்றார்.
காரணம்
தன்னுடைய அனைத்து சொத்துகளையும் ராகுல் காந்திக்கு எழுதிவைத்த புஷ்பா இது குறித்து பேசுகையில் "மறைந்த பிரதமர் இந்திரா காந்தி மற்றும் அவரது மகன் ராஜீவ் காந்தி ஆகியோர் நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கும் தங்களது இன்னுயிரை தியாகம் செய்தனர். அதே குடும்பத்தைச் சேர்ந்த சோனியா மற்றும் ராகுல் காந்தி தற்போது நாட்டுக்கு சேவை செய்து வருவதோடு அதற்காகவே தங்களை அர்ப்பணித்து வருகின்றனர். இவர்களின் செயல்பாடு என்னை கவர்ந்தது. ராகுல் காந்தியின் திட்டங்கள், சிந்தனைகள் இந்திய நாட்டிற்கு நிச்சயம் தேவையானதாக இருக்கும். எனவே எனது அனைத்து சொத்துக்களையும் உயில் எழுதி கொடுக்கிறேன்" என்றார்.
புஷ்பா முஞ்சாலுக்கு சொந்தமாக 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மற்றும் 100 கிராம் தங்க நகைகள் இருப்பதாக உயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 78 வயதான மூதாட்டி ஒருவர் தன்னுடைய சொத்துக்களை எழுதி வைத்திருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

மற்ற செய்திகள்
