‘2 வயது குழந்தை உட்பட’... ‘மேலும் 14 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ்’... ‘அதிகரித்த எண்ணிக்கை’...!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் ஏற்கெனவே 6 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது மேலும் 14 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டனில் பரவும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த உருமாறிய கொரோனா வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவுவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் அந்த நாட்டுடனான விமான போக்குவரத்தை இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தடை செய்துள்ளன. மேலும் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
அதன்படி, நவம்பர் 25-ஆம் தேதி முதல் டிசம்பர் 23-ஆம் தேதி வரை இந்தியா வந்த 33 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அந்த கொரோனா மாதிரிகள் அனைத்தும் கொல்கத்தா, புவனேஸ்வர், புனே, ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி ஆகிய நகரங்களில் உள்ள சிறப்பு பரிசோதனை கூடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அதில், 6 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக மத்திய அரசு நேற்று தெரிவித்தது.
இந்நிலையில் மேலும் 14 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தை உட்பட இதுவரை 20 பேருக்கு உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர். தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரத்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.

மற்ற செய்திகள்
