என்ன இப்படி கிளம்பிட்டாங்க..ஊழியர் கொடுத்த வித்தியாசமான ராஜினாமா கடிதம்.."சீரியஸான பிரச்சனை இது" எச்சரிக்கும் தொழிலதிபர்..!
முகப்பு > செய்திகள் > வணிகம்இந்திய தொழிலதிபரான ஹர்ஷ் கோயங்கா பகிர்ந்துள்ள ஊழியர் ஒருவரின் ராஜினாமா கடிதத்தின் புகைப்படம் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
பொதுவாகவே ஊழியர்கள் தங்களது நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்வதற்கு முன்பே, வேறு ஒரு நிறுவனத்தில் பணி நியமன ஆணையை பெற்றுவிடுவர். ஆனாலும், அனைவரும் உண்மையாகவே எந்த காரணத்திற்காக பணியை விட்டு செல்கிறோம் என்பதை குறிப்பிட தயங்குவதை நாம் பார்த்திருப்போம். ஆனால், ஹர்ஷ் கோயங்கா பகிர்ந்துள்ள ராஜினாமா கடிதத்தில் தனக்கு வேலை ஜாலியாக இருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார் ஊழியர் ஒருவர். இந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஹர்ஷ் கோயங்கா
இந்திய பணக்காரர்களுள் ஒருவரும் RPG குழுமத்தின் தலைவருமான ஹர்ஷ் வர்தன் கோயங்கா டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட அறிக்கையின் படி இவருடைய சொத்து மதிப்பு 2.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். அதன் அடிப்படையில் கோயங்கா இந்திய பணக்காரர்களின் பட்டியலில் 85 வது இடத்திலும் உலக பணக்காரர்களின் பட்டியலில் 1445 ஆவது இடத்திலும் உள்ளார்.
ராஜினாமா கடிதம்
ஹர்ஷ் வர்தன் கோயங்கா தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ள இந்த கடிதத்தில் ஊழியர் ஒருவர்,"நான் வேலையை ராஜினாமா செய்கிறேன். இந்த வேலையில் ஜாலியே இல்லை. உங்கள் உண்மையுள்ள ராஜேஷ்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இக்கடிதத்தின் புகைப்படத்தை பதிவிட்டு கோயங்கா,"இந்தக் கடிதம் மிகவும் சிறியது என்றாலும் மிகவும் ஆழமானது. நாம் தீர்க்கவேண்டிய மிகப்பெரிய சிக்கல் இது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ஹர்ஷ் கோயங்காவின் இந்த கடிதம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் "பணத்தினை மட்டுமே இலக்காக எடுத்துக்கொள்ளாமல் பணியாற்ற வேண்டிய சூழ்நிலையை உருவாக்கவேண்டும் என்பதற்காகவே அந்த ஊழியர் இப்படி செய்திருக்கிறார்" என்றும் "நிறுவனங்கள் ஊழியர்களை உற்சாகமாக வைத்துக்கொள்ள போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.