"என் அப்பாவை மீண்டும் ஒரு முறை"...தந்தையர் தினத்தில் ஆனந்த் மஹிந்திரா போட்ட உருக்கமான ட்வீட்.. கலங்கிப்போன நெட்டிசன்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய பணக்காரர்களுள் ஒருவரும் தொழிலதிபருமான ஆனந்த் மஹிந்திரா தனது தந்தையை பற்றி செய்துள்ள ட்வீட் வைரலாக பரவி வருகிறது.
தந்தையர் தினம்
பொதுவாகவே குடும்ப வாழ்க்கைகளில் தந்தைகளின் பாசம் எழுதப்படாத கவிதை போலவே இருக்கிறது. தங்களுக்கான உலகில் பறக்க குழந்தைகளுக்கு சிறகு கொடுக்கும் தந்தையர்களை பாராட்ட, அவர்களுக்கு நன்றி கூற ஒவ்வொரு வருடமும் ஜூன் 19 ஆம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. இன்று சமூக வலை தளங்களில் தங்களது தந்தை குறித்து பலரும் குறிப்பிட்டு வரும் நிலையில், ஆனந்த் மஹிந்திரா உணர்ச்சிகர ட்வீட் ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.
ஆனந்த் மஹிந்திரா
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். அதேபோல தன்னை ஈர்க்கும் விஷயங்கள் குறித்தும் இணைய வெளிகளில் பதிவிடுவது இவரது வழக்கமாகும். இதன் காரணமாக சமூக வலை தளங்கள் வாயிலாக இவரை 8.9 மில்லியன் மக்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.
வைரல் ட்வீட்
ஆனந்த் மஹிந்திரா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்," நான் சிறுவயதில் இருந்தபோது, எனது அப்பா வெளிநாட்டில் இருந்து வரும்போது அவரை வரவேற்கவும், வெளிநாடுகளுக்கு செல்லும்போது அவரை வழியனுப்பவும் அவ்வப்போது விமான நிலையத்திற்கு செல்வேன். இந்த தந்தையர் தினத்தில் மீண்டும் ஒருமுறை எனது அப்பாவை விமான நிலையத்திற்கு சென்று வரவேற்க வேண்டும் என்ற ஆசை எழுந்திருக்கிறது." எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது தந்தையுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் அவர் அந்த பதிவில் இணைத்துள்ளார்.
As a child, it was always special to be be allowed to go to the airport to see my father off or greet him on his return from business trips. On #FathersDay I think of him & wish I could go to the airport again to welcome him back… pic.twitter.com/cQSyQQ3FWP
— anand mahindra (@anandmahindra) June 19, 2022
இந்த ட்வீட் நெட்டிசன்களை கலங்க வைத்திருக்கிறது. இதுவரையில் 5000 பேர் இந்த பதிவை லைக் செய்திருக்கின்றனர். மேலும், "உங்களை நினைத்து நிச்சயம் உங்களது தந்தை பெருமைப்படுவார்" என்றும், "அவர் எப்போதும் உங்களை கவனித்துக்கொண்டே இருப்பார்" என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.