‘ஸ்பாட் பிக்சிங்’ செய்ய சொல்லி மிரட்டுனாரு.. இந்திய தொழிலதிபர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்த கிரிக்கெட் வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய தொழிலதிபர் சூதாட்டத்தில் ஈடுபட சொல்லி மிரட்டியதாக ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

ஜிம்பாப்வே முன்னாள் கேப்டன்
ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரரான பிரண்டன் டெய்லர் (Brendan Taylor), கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2011 முதல் 2021 வரையிலான காலகட்டங்களில் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் 71 போட்டிகளில் ஜிம்பாப்வே அணி கேப்டனாக செயல்பட்டுள்ளார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த ஜிம்பாப்வே வீரர்களின் பட்டியலில் 2-ம் இடத்தில் பிரண்டன் டெய்லர் உள்ளார்.
இந்திய தொழிலதிபரின் அழைப்பு
இந்த நிலையில் பரபரப்பு அறிக்கை ஒன்றை பிரண்டன் டெய்லர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய தொழிலதிபர் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு, ஜிம்பாப்வேயில் டி20 கிரிக்கெட் போட்டி நடத்துவதற்கான ஸ்பான்சர்ஷிப் குறித்து விவாதிப்பதற்காக இந்தியாவுக்கு வர சொன்னார். இந்த விவாதத்துக்காக எனக்கு 15,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.11 லட்சம்) வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
ஓட்டலில் மது விருந்து
நானும் அவரது அழைப்பை ஏற்று இந்தியா சென்றேன். ஓட்டலில் தங்கியிருந்த எனக்கு மது விருந்து அளித்தனர். அப்போது எனக்கு கோகைன் (Cocoin) என்னும் போதைப்பொருளை தந்தனர். நானும் முட்டாள்தனமாக கொஞ்சம் கோகைனை பயன்படுத்திவிட்டேன்.
வீடியோ எடுத்து மிரட்டல்
இதற்கு அடுத்த நாள் அந்த நபர்கள் எனது ஓட்டல் அறைக்கு வந்து, நான் போதைப்பொருள் உட்கொண்ட வீடியோவை காட்டி மிரட்டினார்கள். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ‘ஸ்பாட் பிக்சிங்’ செய்ய சம்மதிக்காவிட்டால் அந்த வீடியோவை பொதுவெளியில் வெளியிடுவோம் என்று மிரட்டினார்கள். இதனால் பயந்து சூதாட்டத்தில் ஈடுபட சம்மதித்து முன் தொகையாக 15,000 டாலர்கள் பெற்றுக்கொண்டேன்.
சூதாட்டத்துக்கு பணம்
இந்த வேலை முடிந்ததும் மேலும் 20,000 டாலர்கள் தருவதாக கூறினார்கள். ஆனால் அங்கிருந்து தப்பித்து சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்பதால் வேறு வழியில்லாமல் அந்த பணத்தை பெற்றேன். வீட்டுக்கு வந்த பிறகு மன அழுத்தம் காரணமாக எனது உடல்நலமும் பாதிக்கப்பட்டது. அந்த தொழிலதிபர் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டார். நான் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை.
புகார் கொடுக்க தாமதம்
இந்த விவகாரம் குறித்து ஐசிசியிடம் நான் உடனடியாக புகார் தெரிவிக்கவில்லை, 4 மாதங்கள் கழித்து தான் புகார் அளித்தேன். நான் புகார் தெரிவிக்க நீண்ட நாட்கள் தாமதித்தை ஒப்புக்கொள்கிறேன். எனது குடும்பத்தின் நலனை பாதுகாக்கும் பொருட்டு ஐசிசியிடம் தகவல் தெரிவிக்க காலம் தாழ்த்தினேன். இதனை ஐசிசி புரிந்து கொள்வார்கள் என்று நினைத்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை.
கிரிக்கெட் வீரர்களுக்கான பாடம்
நான் எந்தவொரு போட்டியிலும் சூதாட்டத்தில் ஈடுபட்டது கிடையாது. என் மீதான புகார் குறித்த ஐசிசி விசாரணையில் முழுமையாக பங்கேற்றேன். எனக்கு பல ஆண்டுகள் தடை விதிக்க ஐசிசி முடிவு எடுத்துள்ளது. இதனை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனது கதை, கிரிக்கெட் வீரர்கள் எந்தவொரு சூதாட்ட அணுகுமுறையையும் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்பதற்கு பாடமாக இருக்க வேண்டும். எனது வாழ்க்கையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர மறுவாழ்வு மையத்துக்கு செல்ல இருக்கிறேன்’ என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். பிரண்டன் டெய்லரின் இந்த பதிவு கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
To my family, friends and supporters. Here is my full statement. Thank you! pic.twitter.com/sVCckD4PMV
— Brendan Taylor (@BrendanTaylor86) January 24, 2022

மற்ற செய்திகள்
