'வேலைவாய்ப்புகள் அதிகரித்தாலும்'... 'இனி இந்த வேலையெல்லாம் மீண்டும் கிடைப்பது கடினம்'... 'சிஎம்ஐஇ ஷாக் தகவல்!'...
முகப்பு > செய்திகள் > வணிகம்இந்தியாவில் வேலைவாய்ப்புகள் அதிகரித்தாலும் பொருளாதார வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் மாத இறுதியில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தொழில் துறை முற்றிலும் முடங்கி, வேலைவாய்ப்புகள் இல்லாமல் போனதோடு பல துறைகளைச் சேர்ந்த ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். வருவாய் இழப்பு, நஷ்டம் போன்ற காரணங்களால் நிறுவனங்கள் பணிநீக்கம், சம்பளக் குறைப்பு ஆகியவற்றில் ஈடுபட்டன. புதிய வேலைவாய்ப்புகள் இல்லாததோடு, ஏற்கெனவே உள்ள வேலையைத் தக்கவைத்துக்கொள்வதே கடினமாக மாறியது. இருப்பினும் ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்ட பின்னர் மீண்டும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கின.
இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் தரவுகளின்படி, ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 121.5 மில்லியன் வேலைகள் இல்லாமல் போன நிலையில், மே மாதத்தில் அந்த எண்ணிக்கை 100.3 மில்லியனாகக் குறைந்துள்ளது. பின்னர் அது ஜூன் மாதத்தில் 29.9 மில்லியனாகவும், ஜூலை மாதத்தில் 11 மில்லியனாகவும் குறைந்துள்ளது. கொரோனாவுக்கு முந்தைய வேலைவாய்ப்பு அளவு நான்கு மாதங்களில் மீண்டும் வரத் தொடங்கியுள்ளதாக இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வேலைவாய்ப்புகள் அதிகரித்தாலும், பொருளாதார வளர்ச்சி குறிப்பிடும்படியாக மேம்படவில்லை எனவும், ஒட்டுமொத்தமாக பார்த்தால் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகத் தெரிந்தாலும் நல்ல ஊதியம் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்காததால் பொருளாதார வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் குறைவுதான் எனவும் இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையத்தின் தலைமைச் செயலதிகாரியும் நிர்வாக இயக்குநருமான மகேஷ் வியாஸ் தெரிவித்துள்ளார். ஏப்ரல் மாதத்தில் மட்டும் 17.7 பில்லியனுக்கு மேலான நல்ல ஊதியம் கிடைக்கும் வேலைகள் காணாமல் போய்விட்டதாகவும், இதுபோன்ற வேலைகள் போய்விட்டால் மீண்டும் கிடைப்பது கடினம் எனவும் அவர் கூறியுள்ளார்.