'இங்கெல்லாம் மட்டும் உயிரிழப்பு அதிகரிக்க என்ன காரணம்?'... 'மத்திய அரசு எச்சரித்துள்ள'... '16 மாவட்டங்களில் 8 தமிழக மாவட்டங்கள்!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் அதிகம் உள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ள 16 மாவட்டங்களில் 8 தமிழக மாவட்டங்கள் உள்ளன.
தமிழகத்தில் முன்னதாக அதிக கொரோனா பாதிப்பு இருந்துவந்த சென்னையில் தற்போது எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில், மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பாதிப்புடன் உயிரிழப்பு விகிதமும் அதிகரித்துவரும் நிலையில், தீவிர பாதிப்பு உள்ளவர்கள் கொரோனா அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், தனியார் மருத்துவமனைகளை நாடும் பாதிக்கப்படுபவர்கள், ஆபத்தான கட்டத்தை எட்டும்போதே அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் 4 மாநிலங்களில் உள்ள 16 மாவட்டங்களில் தேசிய மற்றும் மாநிலங்களின் சராசரியை விட உயிரிழப்பு விகிதம் அதிகம் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இந்திய அளவில் இந்த மாவட்டங்களில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை மட்டும் 17 சதவிகிதமாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ள மாவட்டங்களின் பட்டியலில் சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, திருவள்ளூர், திருச்சி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 8 தமிழக மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் நாள்தோறும் அதிக புதிய பாதிப்புகள் ஏற்படுதல், குறைவான பரிசோதனைகள், அதிகபட்ச பாதிப்பு உறுதியாகும் விகிதம் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.