‘சீனாவில் இருந்து கிளம்புறோம்’... ‘தூது அனுப்பும் இந்தியா’... ‘திசையை திருப்பும் அமெரிக்கா’!

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Sangeetha | May 07, 2020 08:13 PM

கொரோனாவால் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றான சீனப் பொருளாதாரமே ஆட்டம் கண்டநிலையில், சீனா சந்தித்துள்ள இந்தப் பின்னடைவு இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்குச் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

Countries conflict, India to send Investment Pitches to 1000 companies

கொரோனா உருவான சீனாவில் பாதிப்புகள் குறைந்து, அந்நாடு தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட வல்லரசு நாடுகள் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருவதால், உயிரிழப்புகளுடன் பொருளாதார இழப்பையும் சந்தித்து வருகின்றன. இதனால், அமெரிக்கா, ஜப்பான், மற்றும் ஐரோப்பிய நாடுகள், வேண்டுமென்றே கொரோனாவைப் பரப்பியதாக சீனா மீது குற்றஞ்சாட்டி வருகின்றன.

அதிலும், அமெரிக்காவும், சீனாவும் நாளுக்கு நாள் மோதிக்கொண்டுள்ள நிலையில், சீனாவில் இருந்து சுமார் 1,000-த்திற்கும் மேற்பட்ட அமெரிக்கா மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேற்ற அந்தந்த நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அப்படி வெளியேறும் நிறுவனங்களை, இந்தியாவிற்கு இழுக்கும் சரியான நேரம் வந்துள்ளதால், ஊரடங்கால் நிலைகுலைந்த பொருளாதாரத்தை, மீண்டும் முன்னிறுத்தும் முனைப்பில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

அதன்படி, மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு, ஜவுளி, தோல், வாகன உற்பத்தி, உணவுப் பதப்படுத்துதல் உள்ளிட்ட 55 பிரிவுகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்யும் வகையில், ஊக்கச் சலுகை வழங்குவதாக அந்த நிறுவனங்களுடன் இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த மாதம் 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

குறிப்பாக மெட்ரானிக் பிஎல்சி மற்றும் அபோட் ஆய்வகங்களுடன் தங்களது ஆலைகளை இந்தியாவுக்கு மாற்றுவது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.  இதன் மூலம் அதிக வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியும் என்றும், இந்தியாவின் உற்பத்தித் துறையை 2022ஆம் ஆண்டுக்குள் 25 சதவீதம் வளர்ச்சியை எட்ட வைக்க முடியும் என்று நம்பப்படுகிறது.