'அங்கு 80% பேருக்கு கொரோனா இருக்கலாம்'... உலகிலேயே 'அதிக' பாதிப்புள்ள நாடுகளில் ஒன்றாக வாய்ப்பு... சர்வதேச அமைப்பு 'அச்சம்'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | May 07, 2020 01:06 PM

ஆப்கானிஸ்தானில் 80 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாமென அஞ்சப்படுவதாக குடிபெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

Afghanistan Could Have One Of Highest Coronavirus Infection Rates

ஆப்கானிஸ்தானில் இதுவரை 3,392 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 104 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் காபூலில் 500 பேருக்கு சோதனை செய்யப்பட்டதில் 50 சதவீதம் பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன்மூலம் ஆப்கானிஸ்தானின் மக்கள்தொகையில் 80 சதவீதம் பேருக்கு பாதிப்பு இருக்கலாமென அஞ்சப்படுகிறது.

இதுபற்றிப் பேசியுள்ள குடிபெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் ஆப்கானிஸ்தான் அதிகாரி நிக்கோலஸ் பிஷப், "ஜனவரி முதல் ஈரான் மற்றும் பாகிஸ்தானிலிருந்து திரும்பிய சுமார் 2,71,000 பேருக்கு அடிப்படை வசதி வழங்க ஆப்கானிதான் போராடி வரும் நிலையில், அங்குள்ள சமூக-பொருளாதார நிலை காரணமாக நாட்டு மக்கள் ஈரான் மற்றும் அருகிலுள்ள மற்ற நாடுகளுக்கு  வேலைக்கு செல்லாமல் தொடர்ந்து வாழ முடியாது. மேலும் உள்நாட்டுப் போர் காரணமாக நாட்டின் 30 சதவீதத்திற்கும் அதிகமான பகுதிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.

ஆப்கானிஸ்தானில் 8 பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு ஒரு நாளில் 100 முதல் 150 பரிசோதனைகள் மட்டுமே நடத்தப்படுகின்றன. போதியளவு பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இல்லாதது, வசதிகள் இல்லாதது, குறைவான தனிமனித ஆயுட்காலம் (50 ஆண்டுகள்) ஆகியவற்றுடன் பெரும்பாலானோர் காசநோய், எய்ட்ஸ், புற்றுநோய் போன்ற நிலைமைகளுடன் பிறந்துள்ளனர். கூடுதலாக சுற்றுச்சூழல் மாசுபாடு ஆபத்தும் உள்ளது.

ஒரு குடும்பத்தில் சராசரியாக ஏழு பேர் உள்ள நிலையில் அவர்கள் சிறிய அறைகளிலேயே தங்கியுள்ளனர். சில நாட்களுக்கு மேல் வீடுகளுக்குள் முடங்கி இருக்க அவர்களுடைய சமூக பொருளாதார நிலை இடமளிப்பதில்லை. வெளியில் சென்றாக வேண்டிய கட்டாயத்தால் தனிமனித இடைவெளி, தனிமைப்படுத்திக் கொள்தல் ஆகியவை அங்கு சாத்தியமில்லை. இதுபோன்ற காரணங்களால் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமுள்ள நாடாக ஆப்கானிஸ்தான் இருக்க வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.