'பிரபல வங்கியில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடு!!!'... 'அடுத்த ஒரு மாதத்தில் இத்தனை ஆயிரம் மட்டுமே எடுக்கலாம்'... 'வெளியான திடீர் அறிவிப்பு!'...
முகப்பு > செய்திகள் > வணிகம்பிரபல வங்கி ஒன்றில் அடுத்த ஒரு மாதத்துக்கு பணம் எடுப்பதில் திடீர் கட்டுப்பாட்டை மத்திய அரசு விதித்துள்ளது.
சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லட்சுமி விலாஸ் வங்கி, நாட்டின் பல்வேறு இடங்களில் 566 வங்கிக் கிளைகளையும், 918 ஏடிஎம்களையும் கொண்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே அந்த வங்கி மிக மோசமாகச் செயல்பட்டு வரும் நிலையில், சிறு குறு நடுத்தர நிறுவனங்களுக்குக் கடன் வழங்கிக் கொண்டிருந்த அந்த வங்கி பெரு நிறுவனங்களுக்கும் கடன் வழங்கி வாராக் கடன் பிரச்சினையில் சிக்கியுள்ளது. இதையடுத்து லட்சுமி விலாஸ் வங்கியின் வாராக் கடன்கள் 2020 மார்ச் மாத நிலவரப்படி 25.39 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
மேலும் வாராக் கடன் பிரச்சினையுடன் அந்த வங்கியின் டெபாசிட் தொகையும் குறையத் தொடங்கி, வங்கியின் நிலையான வைப்புத் தொகை ரூ 31,000 கோடியிலிருந்து ரூ 21,000 கோடியாகக் குறைந்துள்ளது. இதனால் கடந்த 2019 செப்டம்பர் மாதத்தில் லட்சுமி விலாஸ் வங்கியை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் மத்திய ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் பெரிய கடன்களை வழங்கவோ அல்லது பெரிய டெபாசிட் தொகையைப் பெறவோ முடியாது. அத்துடன் இந்த வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைக்கவும் ரிசர்வ் வங்கி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருகிற டிசம்பர் 16ஆம் தேதி வரையில் லட்சுமி விலாஸ் வங்கியை மொரட்டோரியத்தின் கீழ் கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் லட்சுமி விலாஸ் வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் ஒரு மாதத்துக்கு அதிகபட்சமாக ரூ 25,000 மட்டுமே வித்டிரா செய்ய முடியும். அதைத் தாண்டி பணம் எடுப்பதற்கு இன்று மாலை 6 மணி முதல் டிசம்பர் 16 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவச் செலவுகள், கல்விச் செலவு, திருமணச் செலவு போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்குப் பணம் எடுப்பதாக இருந்தால் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்று 25,000 ரூபாய்க்கு மேல் எடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.