'இப்படியே போச்சுனா எத்தனை பேர் 'ரோட்டு'க்கு வருவாங்க தெரியுமா!? கொடிகட்டி பறந்தவங்களுக்கே இந்த நிலையா'?.. மோசமான நெருக்கடியில் நிறுவனங்கள்!.. 'பகீர்' தகவல்!
முகப்பு > செய்திகள் > வணிகம்இந்திய விமான நிறுவனங்களை மத்திய அரசுதான் காப்பாற்ற வேண்டும் என்று ஆசிய பசிபிக் விமானப் போக்குவரத்து மையம் தெரிவித்துள்ளது.
இந்திய விமானப் போக்குவரத்துச் சந்தையில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதோடு விமான எரிபொருள் விலையேற்றம், மேலாண்மைச் செலவுகள் அதிகரிப்பு, பயணிகள் வாயிலான வருவாய் குறைவு போன்ற காரணங்களால் இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் போதிய அளவில் வருவாய் ஈட்ட முடியாமல் கடுமையான கடன் சுமையிலும் நிதி நெருக்கடியிலும் சிக்கித் தவிக்கின்றன. குறிப்பாக, அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் ரூ.60,000 கோடி கடன் சுமையில் தனியாருக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. இதுபோன்ற சூழலில் கொரோனா பாதிப்பால் விமான நிறுவனங்களின் நிலை இன்னும் மோசமாகியுள்ளது.
கடந்த ஒரு ஆண்டாகவே விமானப் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கையும், அதன் வாயிலான வருவாயும் மிக மோசமாகக் குறைந்துள்ளதாக ஆசிய பசிபிக் விமானப் போக்குவரத்து மையம் தெரிவித்துள்ளது. 2019-20 நிதியாண்டில் மொத்தம் 137 மில்லியன் பேர் உள்நாட்டு விமானப் பயணங்களை மேற்கொண்டிருந்தனர். ஆனால், 2020-21 நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 50 மில்லியன் வரையில் குறைவாகவே இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் விமானச் சேவை பாதிக்கப்பட்டது. இது பெரும் வருவாய் இழப்புக்கு வழி வகுத்துள்ளது.
இந்த ஆண்டில், இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு 4 பில்லியன் டாலர் முதல் 4.5 பில்லியன் டாலர் வரையில் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு நீடிப்பதாலும், நிச்சயமற்ற சூழல் நிலவுவதாலும், இந்திய விமானப் போக்குவரத்துச் சந்தையில் பெரும் பாதிப்பு எதிர்நோக்கியுள்ளதாக ஆசிய பசிபிக் விமானப் போக்குவரத்து மையம் தெரிவித்துள்ளது. எனவே, இதுபோன்ற நெருக்கடியான சூழலைச் சமாளிக்க அரசின் உதவி கட்டாயம் தேவை எனவும், விமான நிறுவனங்களுடன் இந்திய அரசு இணைந்து செயல்பட்டு வீழ்ச்சிப் பாதையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று இந்த ஆய்வில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.