கோவில் விழா ஒன்றில் பங்கேற்ற காமெடி நடிகர் வடிவேலு, தான் பாடிய சூப்பர் ஹிட் பாடலை மேடையில் பாடி பார்வையாளர்களை உற்சாகப்படுத்திய வீடியோ வைரலாகி வருகிறது.

சமீபத்தில் தளபதி விஜய் நடித்த ‘ஃபிரெண்ட்ஸ்’ திரைப்படத்தில் வடிவேலு நடித்திருந்த ‘நேசமணி’ என்ற பெயிண்டிங் கான்டிராக்டர் கதாபாத்திரம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
திடீரென உலகளவில் ட்ரெண்டான நேசமணி வடிவேலு, சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே கோவில் திருவிழா ஒன்றில் கலந்துக் கொண்டுள்ளார். அங்கு சென்ற அவர், மேடையில் ஏறி ‘எல்லாமே என் ராசா தான்’ திரைப்படத்தில் வடிவேலுவே எழுதி பாடிய ‘எட்டணா இருந்தா எட்டூரும் என்பாட்ட கேக்கும்..’ என்ற பாடலை பாடி தனக்கே உரிய ஸ்டைலில் ஆட்டம் போட்டு அங்கிருந்த பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து பேசிய அவர், தன்னை அந்த ஊரின் மருமகன் என்று குறிப்பிட்டார். மேலும், கோவில் திருவிழாக்கள் நடத்தினால் மழை பெய்யும் எனவும் பாரம்பரியத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கினார்.