ஜெயலலிதாவின் நினைவு தினம்: ‘தலைவி’-க்கு நடிகை கங்கனா மரியாதை!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Dec 05, 2019 03:48 PM
மறைந்த முன்னாளி முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி, பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்து வரும் ‘தலைவி’ திரைப்படத்தின் ஷோட்டிங் செட்டில் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

தமிழில் கடந்த 2008ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தாம் தூம்’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகை கங்கனா ரனாவத், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருகிறார். இதற்காக நடிகை கங்கனா தமிழ் மொழியும், பரதநாட்டியமும் கற்று வருகிறார்.
விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ‘பகுபலி’, ‘மணிகர்னிகா’ உள்ளிட்ட படங்களுக்கு கதை எழுதிய கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார். விஷால் விட்டல் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு மதன் கார்கி பாடல்கள் எழுதுகிறார்.
இப்படத்தில் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் அரவிந்த் சாமி நடிக்கவிருக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வரும் ‘தலைவி’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு நடிகை கங்கனா ரனாவத் மாலையிட்டு, மரியாதை செலுத்தினார்.