தல அஜித் மேல அம்பூட்டு பாசம்...! - குழந்தைகளுக்கு தல பேரு வச்சு அழகு பார்த்த தீவிர ரசிகர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித்குமாருக்கு ரசிகர்கள் வட்டாரம் ஏராளம். திரைப்பட ஷூட்டிங்கின் போது மட்டுமே நடிகர் அஜித்தை வெளியே காண முடியும், பிற நடிகர்களை போல் எவ்வித பொது நிகழ்ச்சிகளிலும், படங்களின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்ளாமல் இருப்பது விமர்சனமாகவும், வியப்பாகவும் உள்ளது.

Thala fan from Madurai have named his child as 'Thala Ajith'

திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி கார், பைக், ஆளில்லா விமானம் இயக்கும் ஏரோ மாடலிங், ஃபோட்டோகிராபி, சமையல், துப்பாக்கிச் சுடுதல் என பலவற்றிலும் ஆர்வம் கொண்ட அஜித், ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கி வருகிறார். பல கோடி ரசிகர்கள் அவரை பார்த்து வாழ்வில் முன்னேற ஓர் முன்னுதாரணமாய் திகழ்ந்து வருகிறார்.

அதற்கு ஓர் எடுத்துக்காட்டாக மதுரை அருகே நடிகர் அஜித் மீதான ஈர்ப்பின் காரணமாக தனது மகனுக்கு ‘தல அஜித்’ என அஜித்தின் ரசிகர் ஒருவர் பெயர் வைத்துள்ளார். மதுரை ஜெய்ஹிந்த்புரம் தேவர்நகர் பகுதியை சேர்ந்த மதுரை வீரன் - ஜோதிலட்சுமி ஆகிய இருவரும் நடிகர் அஜித்தின் ரசிகர்கள். இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில் 2013ஆம் ஆண்டு பிறந்த தனது மூத்த மகனுக்கு தல அஜித் என பெயர் சூட்டிய நிலையில், பிறப்பு சான்றிதழ் முதல் ஆதார் அட்டை , குடும்ப அட்டை என அனைத்திலும் தல அஜித் என்றே அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளார்.

தற்போது பள்ளியில் பயின்றுவரும் தல அஜித்தின் அடையாள அட்டையின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியான நிலையில், அஜித் ரசிகர்கள் அதனை ட்ரெண்டாக்கினர். அஜித் நடிகர் என்பதையும் தாண்டி தன்னம்பிக்கையுடன் பல்வேறு துறைகளிலும் தடைகளை தாண்டி சாதித்து வருகிறார். இதனால் தனது மகனும் தன்னம்பிக்கையோடு சாதனை படைக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் மகனுக்கு தல அஜித் பெயரை சூட்டியதாக மதுரை வீரன் தெரிவித்துள்ளார்.

நடிகராகவும், சிறந்த குடும்ப தலைவனாகவும், ரசிகர்களை நல்வழிப்படுத்த கூடியவராகவும் விளங்கும் தல அஜித் குமாரின் பெயரை சூட்டியது தனது மகனுக்கென தனி மரியாதை கிடைப்பதாகவும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். பீரோ கம்பெனி வைத்திருக்கும் மதுரை வீரன், தனது இரண்டாவது பெண் குழந்தைக்கும் அஜித் ஞாபகார்த்தமாக ‘அஜிதா’ என பெயர் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.