பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்தை விமர்சனம் செய்த ‘தல 60’ இயக்குநர்!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 18, 2019 10:40 PM
நடிகர் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்தின் பிரஸ் ஷோவை பார்த்த இயக்குநர் ஹெச்.வினோத் அப்படத்தை விமர்சனம் செய்துள்ளார்.

பயாஸ்கோப் ஃபிலிம் ஃபிரேமர்ஸ் சார்பாக பார்த்திபன் தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்துள்ள ‘ஒத்த செருப்பு’ திரைப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
திரைத்துறையில் வித்தியாச முயற்சியாக ஒரே கதாபாத்திரமாக படம் முழுவதும் பார்த்திபனே நடித்திருக்கிறார். ஒன் மேன் ஷோ-வாக உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலரை பார்த்து இந்திய திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, மம்மூட்டி, மோகன்லால், ஷங்கர், ஆமிர்கான், ரசூல் பூக்குட்டி, யாஷ் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள், பார்த்திபனின் இந்த முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், இப்படம் வரும் செப்.20ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் நிலையில், இதன் ப்ரஸ் ஷோ இன்று நடைபெற்றது. இதில் படத்தை பார்த்த இயக்குநர் ஹெச்.வினோத் படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது . ரொம்ப Brilliant-ஆ இருந்தது. படம் ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துல ஒரு ஆள் இருக்காரு என்ற விஷயம் மறந்துடுது. தமிழ் சினிமாவில் இது ஒரு முக்கியமான முயற்சி. இந்த முயற்சி வெற்றியடைய வேண்டும்’ என தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
சமீபத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தின் மூலம் சமூகத்தில் நிலவும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லையை அழுத்தமாக பதிவு செய்திருந்தார். அதன் வெற்றியை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘தல 60’ திரைப்படத்தையும் ஹெச்.வினோத் இயக்குகிறார். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.
பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ படத்தை விமர்சனம் செய்த ‘தல 60’ இயக்குநர்! வீடியோ