மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரிக்கும் இயக்குநர் பாலா - ஹீரோ யார் தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 18, 2019 09:27 PM
‘தாரை தப்பட்டை’, ‘மருது’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார்.

மலையாளத்தில் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற ‘ஜோசப்’ திரைப்படம் தமிழில் ரீமேக்காக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘தாரை தப்பட்டை’ திரைப்படத்தில் ஆர்.கே.சுரேஷை இயக்கிய பிரபல இயக்குநர் பாலா இப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை ‘ஜோசப்’ படத்தை இயக்கிய பத்மகுமாரே தமிழிலும் இயக்கவிருக்கிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் வரும் நவம்பர் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. இப்படத்தில் 2 வித்தியாசமாக தோற்றங்களில் ஆர்.கே.சுரேஷ் நடிக்கவிருப்பதாகவும், அதில் ஒரு லுக்கிற்கு சுமார் 20 கிலோ உடல் எடையை கூட்டியும், ஃபிளாஷ் பேக் காட்சிகளுக்காக 30 கிலோ உடல் எடையை குறைத்தும் நடிக்கவிருப்பதாக தெரிகிறது.
ஒரு நடிகராக தனது திரை பயணத்தில் இப்படம் ஒரு திருப்புமுனையாக அமையும் என ஆர்.கே.சுரேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருப்பதால், ஜோசப் படம் எனக்கு ஏற்ற படமாக இருக்கும். சமீபத்தில் பார்த்த சிறந்த படம் ஜோசப். படத்தின் கதை பிடித்துவிட்டதால் இதன் ரீமேக் உரிமத்தை சமீபத்தில் வாங்கினேன் என கூறினார்.
மலையாளத்தில் வைத்த ‘ஜோசப்’ என்ற பெயரே இந்த படத்திற்கும் வைக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இப்படத்தின் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.