RIP: பாலிவுட்டை உலுக்கிய இன்னொரு மரணம்! இளம் வயதில் தற்கொலை செய்த திஷா சலியன்!
முகப்பு > சினிமா செய்திகள்பாலிவுட் திரைப்பட நடிகர்களின் மேனேஜராக பணி புரிந்த திஷா சலியன் (28), மும்பை மலாட் பகுதியிலுள்ள, ஜூன் 9-ம் தேதி அதிகாலையில் தனது அபார்ட்மெண்டின் 14-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

படுகாயம் அடைந்த அவரை அருகாமையிலிருந்த மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனையை அடையும் முன்பே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
எம் எஸ் தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து புகழ்பெற்ற பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மற்றும் ஃபக்ரே படப் புகழ் வருண் ஷர்மா ஆகியோரின் முன்னாள் மேனேஜராக பணி புரிந்தவர் திஷா. இவர்களைத் தவிர, மேரே டாட் கி மாருதி படத்தின் நடிகை ரியா சக்ரவர்த்தி மற்றும் நகைச்சுவை நடிகர் பாரதி சிங் ஆகியோரின் பணிகளை திஷா நிர்வகித்து வந்தார்.
திஷா மாடியிலிருந்து குதிப்பதற்கு முன்னதாக தனது வருங்கால கணவருடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்பட்ட நிலையில், அவரது தற்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரது திடீர் மறைவினால் பாலிவுட் அதிர்ச்சிக்குள்ளானது. சுஷாந்த் சிங் ராஜ்புட், சோனாக்ஷி சின்ஹா, மெளனி ராய், ஷீமா குரேஷி உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் திஷா சலியனுக்கு இரங்கல் தெரிவித்தனர். வருண் ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பது, ‘சொற்களை இழந்து தவிக்கிறேன். அதிர்ச்சியில் பேச்சிழந்து விட்டேன். இது உண்மையாக இருக்கக் கூடாது. திஷாவுடன் நிறைய நினைவுகள் உள்ளன. அவர் அழகும் அன்பும் நிரம்பிய தோழி.
எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பீர்கள், பிரச்சனைகள் அனைத்தையும் உங்கள் பாணியில் பொறுமையாக கையாண்டீர்கள். உங்களை நாங்கள் மிகவும் இழக்கிறோம்.இந்த இழப்பைத் தாங்கும் வலிமை ஏற்பட உங்கள் குடும்பத்தினருக்கு எனது பிரார்த்தனைகள். திஷா நீங்கள் போய்விட்டீர்கள் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. அதுவும் இவ்வளவு சீக்கிரம் போய்விட்டீர்களே!’ என்று உருக்கமாக பதிவிட்டிருந்தார்