உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ திரைப்படம் குறித்து சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்கள் பரவின.
‘இந்தியன் 2’ திரைப்படம் ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் முடித்துக் கொடுக்கப்படும் என இயக்குநர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என தயாரிப்பாளர்கள் தரப்பில் இருந்து இயக்குநர் ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக செய்திகள் வெளியாகின. மேலும், இயக்குநர் ஷங்கர் பாகுபலி நாயகன் பிரபாஸை வைத்து தெலுங்கு படம் ஒன்றை இயக்க திட்டமிட்டு வருவதாகவும், அந்த படத்தை பென் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாகவும் பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் தற்போதைய நிலை குறித்து நமக்கு நம்பதகுந்த வட்டாரத்தில் விசாரித்தபோது, இந்த தகவல்களை முற்றிலுமாக மறுத்துள்ளனர். ‘இந்தியன் 2’ படத்தை ஒதுக்கிவிட்டு இயக்குநர் ஷங்கர், பிரபாஸ் படத்தை இயக்கவிருப்பதாக வெளியான தகவலில் துளியும் உண்மையில்லை. தனது கனவு படமான ‘இந்தியன் 2’ படத்தின் ஷூட்டிங் பணிகளை மீண்டும் தொடங்க இயக்குநர் ஷங்கர் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லீகல் நோட்டீஸை பொறுத்தவரை, திட்டமிட்ட பட்ஜெட்டில் குறித்த நேரத்தில் படத்தை முடித்துத் தர இயக்குநர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என தயாரிப்புக் குழு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ஏற்கனவே இயக்குநர் குழு திட்டமிட்டிருந்த பட்ஜெட்டும், தற்போது தயாரிப்புக் குழு ஒதுக்கிய பட்ஜெட்டும் கிட்டதட்ட சமமாக இருக்கிறதாம், அதனால் தயாரிப்புக்குழுவின் முடிவை ஏற்றுக் கொண்டு ஒதுக்கிய பட்ஜெட்டில் படத்தை முடிக்க இயக்குநர் ஷங்கர் ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் கடந்த நவம்பர் மாதம் பூஜையுடன் தொடங்கியது. உலகநாயகன் கமல்ஹாசன், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.