சர்ச்சையை கிளப்பிய ஜெயம் ரவியின் கோமாளி டிரைலர் - சூப்பர் ஸ்டாரின் Reaction இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Aug 06, 2019 12:59 PM
ஜெயம் ரவி நடித்துள்ள ‘கோமாளி’ திரைப்படத்தில் ரஜினி குறித்த காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரியாக்ஷன் எப்படி இருந்தது என்பதை நடிகர் ஜெயம் ரவி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு. கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ள இப்படம் வரும் ஆக.15ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், கடந்த ஆக.3ம் தேதி வெளியான கோமாளி படத்தின் டிரைலரில் ரஜினியின் அரசியல் வருகையை விமர்சிக்கும் வகையில் இடம்பெற்றிருந்த காட்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், 'கோமாளி' டிரைலரை பார்த்துவிட்டு கமல்ஹாசன், பட தயாரிப்பாளருக்கு தொலைபேசி வாயிலாக தன் அதிருப்தியைப் பதிவு செய்தார். இது பெரும் சர்ச்சையான நிலையில், குறிப்பிட்ட காட்சி படத்திலிருந்து நீக்கப்படும் என்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் இயக்குநர் ப்ரதீப் வீடியோ மூலம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக நடிகர் ஜெயம் ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளார். அந்த அறிக்கையில், “கோமாளி டிரைலரில் ரஜினி சார் குறித்த காட்சிகள் துரதிருஷ்டவசமாக அவரது ரசிகர்களை காயப்படுத்தியுள்ளது. நல்ல நோக்கத்திலேயே அந்த காட்சி வைக்கப்பட்டது. நானும் ரஜினி சாரின் தீவிர ரசிகன், உங்களை போல அவரது அரசியல் வருகையை எதிர்நோக்கியிருக்கிறேன்”.
“ரஜினி சாரின் படங்களை பார்த்து வளர்ந்த நாம், அவரையோ அல்லது அவரது ரசிகர்களையோ மரியாதை குறைவாக நடத்தவோ, உள்நோக்கத்துடனோ அந்த காட்சிகள் வைக்கப்படவில்லை. உண்மையாகவே டிரைலரை பார்த்துவிட்டு ரஜினி சார் ‘கோமாளி’ படக்குழுவை பாராட்டினார். கிரியேட்டிவ் மற்றும் தனித்துவமான ஐடியாவை கொண்டு வந்ததற்கு படக்குழுவுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்”.
“எனினும், எவ்வித உள்நோக்கமும் இன்றி வைக்கப்பட்ட அந்த காட்சிகளுக்கு ரஜினி சாரின் ரசிகர்களிடம் இருந்து எதிர்மறை கருத்துக்கள் வந்திருப்பதால், படத்தில் குறிப்பிட்ட காட்சியை நீக்க முடிவு செய்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.