‘அப்பா வழியில் ராதிகா சரத்குமார்...’ - தமிழ் திரைத்துறை அளித்த கவுரவம்!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 24, 2019 01:22 PM
பழம்பெரும் நடிகரான M.R.ராதாவின் மகளும், பிரபல நடிகையுமான ராதிகா சரத்குமாரின் கலை சேவையை பாராட்டி அவருக்கு புதிய பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1978ம் ஆண்டு வெளியான ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ராதிகா. திரைத்துறையிலும், நாடகத் துறையிலும் M.R.ராதா கோலொச்சி இருந்த போதிலும், அப்பாவின் புகழை பயன்படுத்தாமல், தனது திறமையால், சிறப்பான நடிப்பால் தனக்கென ஓர் இடத்தை தக்க வைத்துள்ளார் ராதிகா.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் பல நூறு படங்களில் நடித்துள்ள ராதிகா, சின்னத்திரையிலும் அசைக்க முடியாத இடத்தை பிடித்துள்ளார். இவர் நடித்த சித்தி சீரியல் தொடங்கி சந்திரகுமாரி வரை ராதிகாவின் சீரியலுக்கான ரசிகர்கள் வட்டாரம் ஏராளம். இது தவிர, முன்னணி ஹீரோயினாக வலம் வந்த போதிலும், தற்போதுள்ள முன்னணி கதாநாயகர்களுக்கு அம்மாவாகவும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது சுரபி ஃபிலிம்ஸ் சார்பில் இயக்குநர் சரண் இயக்கத்தில் பிக் பாஸ் முதல் சீசன் டைட்டில் வின்னர் ஆரவ் ஹீரோவாக நடித்துள்ள ‘மார்க்கெட் ராஜா MBBS' திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில், நடிகை ராதிகா சரத்குமாருக்கு ”நடிகவேள் செல்வி” என்ற பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.
திரையுலக பிதாமகர்களின் முன்னிலையில் இந்த பட்டம் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டத்தை பேராசிரியர் முனைவர் ஞானசம்பந்தம் மற்றும் இயக்குநர் சரண் ஆகியோர் வழங்கினர்.