பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.யேசுதாஸ் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘தமிழரசன்’ திரைப்படத்தில் புரட்சி கரமான பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

எஸ்.என்.எஸ் மூவீஸ் சார்பில் கௌசல்யா ராணி தயாரிப்பில் அதிக பொருட்செலவில் உருவாகி வரும் ‘தமிழரசன்’ திரைப்படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மேலும், சுரேஷ் கோபி, சோனு சூட், யோகி பாபு, சங்கீதா, கஸ்தூரி, ரோபோ சங்கர், ரோபோ சங்கர், சாயாசிங், மதுமிதா, ஒய்.ஜி.மகேந்திரன், சென்ட்ராயன், முனீஸ்காந்த் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்.
இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி வரும் ‘தமிழரசன்’ திரைப்படத்தில் இளையராஜா இசையில் ஜெயராம் எழுதிய ‘பொறுத்தது போதும் பொங்கிட வேணும் புயலென வா’ என்ற புரட்சிகரமான பாடலை கே.ஜே.யேசுதாஸ் பாடியுள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு மலையாளத்தில் மம்மூட்டி நடித்த ‘பழசிராஜா’ படத்தில் பாடிய யேசுதாஸ், அதன் பிறகு திரைப்படங்களில் பாடாமல் தவிர்த்து வந்தார். தற்போது 10 ஆண்டுகள் கழித்து தங்களது திரைப்படத்தில் யேசுதாஸ் பாடியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.