நடிகர் விஜய் ஆண்டனி நடித்து வரும் ‘தமிழரசன்’ திரைப்படத்தின் மூலம் பிரபல நடிகை சங்கீதா மீண்டும் திரையில் நடிக்கவிருக்கிறார்.

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கும் இப்படத்தை பாபு யோகேஸ்வரன் இயக்கி வருகிறார். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக இப்படத்தில் ரம்யா நம்பீசன் நடிக்கிறார். மேலும், பூமிகா, சோனு சூட், யோகிபாபு, ரோபோ ஷங்கர், முனீஸ்காந்த், இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் பிரணவ், மலையாள நடிகர் சுரேஷ் கோபி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இரண்டாண்டுகளுக்கு முன்பு வந்த 'நெருப்புடா' படத்தில் நெகடிவ் வேடத்தில் நடித்து தூள் கிளப்பிய சங்கீதா, அதன் பிறகு எந்த படத்திலும் நடிக்காமல் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். தற்போது விஜய் ஆண்டனி நடிக்கும் ‘தமிழரசன்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இது குறித்து நடிகை சங்கீதா கூறுகையில், எனக்கேற்ற சரியான கதாபாத்திரம் அமையாததால் நிறைய படங்களை தவிர்த்து வந்தேன். இந்த படத்தில் எனது கேரக்டர் மிகவும் பரபரப்பாக பேசப்படும் விதமாக உள்ளதால் நடிக்க ஒப்புக் கொண்டேன். மிகப் பெரிய மருத்துவமனையை நிர்வகிக்கும் டாக்டர் வேடம் இது. இதில் என் கதாபாத்திரம் பவர் புல்லானது என்றார்.
இசைஞானி இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் இப்படம் குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.