மறைந்த நடிகர் சேதுவின் கடைசி ஆசை.?! - நெருங்கிய நண்பர் பகிர்ந்த உருக்கமான விஷயங்கள்.
முகப்பு > சினிமா செய்திகள்மறைந்த நடிகர் சேதுராமன் குறித்து அவரது நெருங்கிய நண்பர் ராஜேஷ் உருக்கமான விஷயங்களை தெரிவித்துள்ளார்.
சந்தானம், பவர்ஸ்டார் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்தவர் சேதுராமன். இதையடுத்து இவர் வாலிப ராஜா, 50/50 உள்ளிட்ட படங்களில் நடித்தார். தோல் மருத்துவரான இவர் சென்னையில் Zi என்கிற பிரபல தோல் மருத்துவமனையை நடத்தி வந்தார். பல பிரபலங்களுக்கும் இவர் தோல் சார்ந்த மருத்துவங்களை அளித்து வந்தார். இதனிடையே இவர் கடந்த 26-ஆம் தேதி காலமானார். ஹார்ட் அட்டாக் காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. சேதுராமனின் இந்த திடீர் மறைவு ஒட்டுமொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் சேதுராமனுடன் ஆரம்பக் காலங்களில் இருந்தே நெருங்கி பழகிய அவரது நண்பர் ராஜேஷிடம் பேசினோம். சேதுராமனின் குணம், அவரது சினிமா ஆசை, அவரின் மிகப்பெரிய கனவு வரை பல விஷயங்களை அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ''சேதுராமன் குடும்பம் மூன்று தலைமுறை டாக்டர்களின் குடும்பம். அதே போல அவர் வசதியிலும் நல்ல நிலையில் இருந்தார். ஆனால், அதை எல்லாம் அவர் ஒருபோதும் பார்த்ததில்லை. அனைவரிடமும் மிக சாதாரணமாகவே பழகினார். அதுதான் சேதுராமனை எல்லோருக்கும் பிடித்து போகும் காரணமாக அமைந்தது. அவர் ஒரு மிகச்சிறந்த மனிதன்''.
அதே போல சேதுவுக்கும் நடிகர் சந்தானத்துக்கும் மிக நீண்ட காலமாகவே நட்பு இருந்து வந்தது. அவர் லொல்லு சபாவில் நடித்து கொண்டிருந்த காலத்தில் இருந்தே சேதுராமன் அவருடன் பழகி வருகிறார். அந்த நட்பே அவர்களை படத்திலும் நடிக்க வைத்தது. அதை தொடர்ந்து இன்னும் சில படங்களில் நடித்தார் சேதுராமன். ஆனால் சினிமா என்று இருந்துவிட்டால், தான் ஏழு வருடம் படித்த மருத்துவம் மக்களுக்கு பயன்படாமல் போய்விடும், என தனது ஆசையை விடுத்து அவர் மருத்துவத்தில் கவனம் செலுத்தினார்''.
மேலும் சேதுராமனுக்கு மிகப்பெரிய கனவு இருந்தது. சினிமாத்துறையை சேர்ந்த பல பிரபலங்களும், பெரும் பணக்காரர்களும் அவரிடம் தோல் மருத்துவ சிகிச்சைகளை எடுத்து கொண்டனர். ஆனால், தோல் மருத்துவன் என்பது, பணமுள்ளவர்களுக்கு மட்டுமில்லாமல், அது சாமானியர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று விரும்பினார். தோல் பாதிப்பு ஏற்பட்டவர்கள், வென் குஷ்டம் வந்தவர்கள் போன்றவர்களுக்கு அது மனதளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அவர்களுக்கு இந்த மருத்துவம் எளிதாக கிடைக்க வேண்டும். அதற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டார். அதற்கான செயல்களையும் செய்தார். ஆனால் விதி அவரை இவ்வளவு சீக்கிரத்தில் எடுத்து கொண்டு போய்விட்டது'' என்று அவர் உருக்கமாக தெரிவித்தார்.