விஜய்சேதுபதி ரசிகர்கள் போலீஸ் புகார்... "சமூக அமைதியை சீர்குலைக்கும் தூண்டுகோலாக..."
முகப்பு > சினிமா செய்திகள்சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி இந்து மதத்தை புண்படுத்தியதாக அவர் மீது சிலர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது பற்றி விஜய் சேதுபதி கருத்து கூறாத நிலையில், விஜய் சேதுபதியின் ரசிகர்கள் தற்போது சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
அதில் கூறியிருப்பது "விஜய் சேதுபதி அவர்கள் ஒரு ஆண்டுக்கு முன்பு சன் டிவி தொலைக்காட்சியில் 'நம்ம ஊரு ஹீரோ' என்ற நிகழ்ச்சியில் மறைந்த கதாசிரியரும் நகைச்சுவை நடிகருமான கிரேசி மோகன் அவர்கள் ஒரு மேடையில் சொன்ன நகைச்சுவை துணுக்கை, இந்த நிகழ்ச்சியில் மறு பதிவு செய்தார். அப்படி எதார்த்தமாக சொன்ன நகைச்சுவை துணுக்கு ஒன்று சொன்ன பொருள் தன்மையிலிருந்து மாற்றி இந்துக்களுக்கு எதிராக அந்த காணொளியை எடிட் செய்து குறிப்பிட்ட சிலர், வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்.
இந்த வதந்தியை தொடர்ந்து விஜய் சேதுபதியை எதிர்த்தும் ஆதரித்தும் சமூக வலைதளத்தில் ஒரு பெரும் சர்ச்சை நிகழ்கிறது. இந்த சர்ச்சையில் தர்மத்தை பாதுகாக்கும் காவலர்களைப்போல் வாதிடுபவர்கள் தர்ம முறைகளை மீறி விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினரை பற்றி தரக்குறைவாகவும், தரம் தாழ்ந்தும் பதிவிடுகிறார்கள். இது விஜய் சேதுபதி அவர்களின் நற்பெயரை குலைப்பதோடு தேவையில்லாத வலைதள வாக்குவாதங்கள் மூலம் சமூக, சமய நல்லிணக்கத்தையும், அமைதியையும், சீர்குலைக்கும் ஒரு தூண்டுகோலாக உருவாகிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
அறிவுசார் சமூகத்தில் வாழும் நாம் தனிமனித கருத்துக்கள் வெறுபட்டிருந்தாலும் ஏற்புடையதாக இல்லாமல் இருந்தாலும் தனிமனித மரியாதையை பாதுகாக்கும் விதமாக இருக்கக் கூடாது. கருத்துச் சுதந்திரம் என்பது காயப்படுத்தும் விதமாக இருக்கக் கூடாது. அதனால் உடனடியாக விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றிய தரக்குறைவான, அருவருக்கத்தக்க பதிவுகளை அகற்றவும். இத்தகைய பாதிப்புகள் வராமல் தடுக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படிப்பட்டவைகளுக்கு அடிப்படை காரணமாக அமைந்த சர்ச்சைக்குரிய அந்த காணொளியையும் நீக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறியுள்ளனர்.