ஜெயலலிதா : தமிழ் சினிமாவின் ஆல்-டைம் லேடி சூப்பர்ஸ்டார் - சினிமா பயணம்.. ஒரு பார்வை.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று 73-வது பிறந்த தினம். ஜெயலலிதா என்றவுடன் அவரது அரசியல் வாழ்க்கை, பல்வேறு போராட்டங்கள், என்னற்ற சாதனைகள் தான் நமக்கு முதலில் நியாபகம் வரும். இப்படி அவரது அரசியல் வாழ்க்கை குறித்து எழுத நிறைய இருக்கிறது. அவற்றை எல்லாம் தாண்டி, அவர் சினிமாவில் கடந்த வந்த பாதை, நாம் அனைவரும் நிச்சயம் திரும்பி பார்க்க வேண்டியது. அப்படியான ஜெயலலிதாவின் சினிமா வாழ்க்கை குறித்த ஒரு மறுப்பார்வைதான் இது!

ஜெயலலிதாவின் சினிமா பயணம் | jayalalitha's cinema journey on her birthday

சினிமாவுக்கு வரும் முன்னரே கர்நாடக சங்கீதம், பியானோ, பரதநாட்டியம், குச்சுப்புடி என ஜெயலலிதா இந்த கலைகளை எல்லாம் நன்றாக கற்றிருந்தார். அது பின்னால் அவரது திரையுலக வாழ்க்கைக்கு பெரிதாக உதவியது. ஜெயலலிதாவின் அம்மா சந்தியா திரைப்படத்தில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். அப்போது ஜெயலலிதா, படங்களில் சிறிய தோற்றங்களில் நாடகங்களிலும் நடித்து வந்தார். 1964-ல் 'underseceratary' எனும் நாடகத்தின் மூலம் தமிழில் அவர் பிரபலமானார். கொஞ்சம் கொஞ்சமாக சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் டைரக்டர்கள் மத்தியில் அவர் முகம் பரவ ஆரம்பித்தது. அப்போது அம்மா சந்தியாவுக்கு நிறைய கடன் பிரச்சனைகள் இருந்ததால், ஜெயலலிதா தான் விருப்பப்பட்ட படிப்பை விடுத்து, முழு நேர நடிப்பில் இறங்க வேண்டி இருந்தது. தமிழில் லெஜன்ட்ரி இயக்குநர் ஶ்ரீதர் இயக்கத்தில் வெந்நிற ஆடை படத்தில் அறிமுகம். அப்போதிருந்த ட்ரென்டில் ஜெயலலிதாவின் காஸ்ட்யூம்களும் அவரது நடிப்பும் அனைவருக்கும் புதிதாக இருந்தது. ஸ்கர்ட் அணிந்தபடி, ஜெயலலிதாவின் சேட்டையான நடிப்பு தமிழ் சினிமா ரசிகர்கள் இதுவரை பார்த்திராத வகையில் இருக்க, அவர் அனைவராலும் கவனிக்கப்பட்டார்.

1965-ல் முதல் முறையாக எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்தார். அதற்கு பிறகான அவரது வாழ்க்கையின் தொடக்க புள்ளி அதுதான். பி.ஆர்.பந்தலு இயக்கிய அத்திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட். அதை தொடர்ந்து 1966-ல் பல ஹிட் படங்கள். அதுவரை சின்னப்பா தேவரின் தேவர் பிலிம்ஸ் எடுக்கும் படங்களில் சாவித்திரி தான் வழக்கமாக நடித்து வந்தார். தேவருக்கும் சாவித்திரிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடையடுத்து, தேவர் பிலிம்ஸின் ஆஸ்தான நாயகியானார் ஜெயலலிதா. 1967-ல்  தனது சம்பாத்யத்தில், இப்போது போயஸ் கார்டனில் இருக்கும் வேதா நிலையத்தை ஜெயலலிதா வாங்கினார். 1965-73 காலக்கட்டத்திற்குள் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா ஜோடியில் வந்த படங்கள் பலத்த வரவேற்பை பெற்றது. குறிப்பாக ஆயிரத்தில் ஒருவன், அடிமைப்பெண், காவல்காரன், குடியிருந்த கோயில், ரகசிய போலீஸ், நம் நாடு என இந்த கூட்டணியின் நடிப்பில் வந்த படங்கள் பெறும் வெற்றிபெற்றன. அந்த காலக்கட்டத்தில் ஜெயலலிதா தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். கிட்டத்தட்ட அவர் தான் அன்று இருந்த லேடி சூப்பர்ஸ்டார்!

இதுமட்டுமன்றி சிவாஜியுடன் இவர் நடித்த கல்யாண கலாட்டா, பட்டிக்காடா பட்டினமா, தெய்வமகன்  உள்ளிட்ட படங்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. கல்யாண கலாட்டா படத்தில் ஜெயலலிதாவின் குறும்பான நடிப்பு அவருக்கு நல்ல பாராட்டை பெற்றுக்கொடுத்தது. அப்போதிருந்த முன்னணி ஹீரோக்களான ஜெய்சங்கர், முத்துராமன், ரவிச்சந்திரன், சிவகுமார் என அனைவருடனும் ஜோடி போட்டு, தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் ஹீரோயினாக வலம் வந்தார் ஜெயலலிதா. இது ஒருபுறம் இருக்க, தெலுங்கில், ஏ.என்.ஆர், என்.டி.ஆர் என உச்ச நட்சத்திரங்களின் படங்களிலும் நடித்து, அங்கும் தனது வெற்றியை பதித்தார் ஜெயலலிதா. இன்றிருக்கும் பல ஹீரோயின்கள், கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். அதற்கு எல்லாம் விதை போட்டவர் ஜெயலலிதா. இவரின் வெந்நிற ஆடை, குமரிப்பெண், கௌரி கல்யாணம், வந்தாலே மகராசி, சூர்யகாந்தி உள்ளிட்ட படங்கள் எல்லாம் ஹீரோயினை மையப்படுத்தி அமைந்த கதைகளே. எம்.ஜி.ஆரின் கண்ணன் என் காதலன், சிவாஜியின் அன்பை தேடி உள்ளிட்ட படங்களும் கூட ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவான படங்கள் தான். அப்படி தனக்கென தனி முத்திரையை படைத்திருந்தார் ஜெயலலிதா.

இதற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சினிமா பட வாய்ப்புகளை தவிர்க்க ஆரம்பித்த ஜெயலலிதா, எம்.ஜி.ஆருடன் சேர்ந்து அரசியலில் பயணிக்க ஆரம்பித்தார். அதை தொடர்ந்து கட்சியில் முக்கிய இடம், முதலமைச்சர் நாற்காலி என ஜெயலலிதாவின் க்ராஃப் வேறுதிசையில் சென்றுவிட்டது. ஆனால் அவர் தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய தாக்கம் சாதாரணமானது அல்ல. 5 முறை தமிழ்நாடு ஸ்டேட் ஃபிலிம் அவார்ட், பட்டிக்காடா பட்டினமா, சூர்யகாந்தி ஆகிய படங்களுக்காக அடுத்தடுத்த வருடங்களில் ஃபிலிம் ஃபேர் விருதுகள் என தனது நடிப்புக்கும் சரியான அங்கீகாரத்தை கிடைக்க பெற்றார் ஜெயலலிதா. சினிமா மட்டுமில்லாமல் பொம்மை, துக்ளக் உள்ளிட்ட பத்திரிக்கைகளுக்கு எழுதுவதிலும் ஜெயலலிதா ஈடுபட்டு வந்தார். அப்போதிருந்த நடிகைகளில் அதிக சம்பளம் பெறும் நடிகையாக ஜெயலலிதா தொடர்ந்து நீடித்து வந்தார். தமிழ் சினிமா கதாநாயகிகளுக்கென இருந்த ஸ்டீரியோடைப்களை உடைத்தெரிந்து, தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்த ஜெயலலிதா அப்போது மட்டுமல்ல, அன்றும் இன்றும் என்றும் தமிழ் சினிமாவின் ஆல்டைம் லேடி சூப்பர்ஸ்டார் தான்.

Happy Birthday to our Beloved Jayalalitha, for inspiring a lot in Cinema.

Entertainment sub editor