கதைல அவ்ளோ நம்பிக்கை இருந்தாதான், இப்படி கதை சொல்ல முடியும் - கீர்த்தி சுரேஷ் பேட்டி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

டீஸர் மற்றும் ட்ரெய்லர் மூலமாகவே  பெண்குயின் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் இதுவரை 30 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது . அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தத்திரைப்படத்தில், கீர்த்தி சுரேஷ், லிங்கா, நித்யா கிருபா, மாதம்பட்டி ரங்கராஜ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இம்மாதம் 19-ம் தேதி அமேஸான் பிரைமில் இப்படம் வெளியாக உள்ளது.

Interview with Keerthi suresh regarding her role in penguin

'நடிகையர் திலகம்' படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமாகி தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ், 'பெண்குயின்' படத்தில் குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளார். தேசிய விருது, இமேஜ் பாதிப்பு, குடும்ப படம், சம்பள குறைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கீர்த்தி சுரேஷ் பேசியதாவது:

இமேஜ் பாதிப்பு

'பெண்குயின்' படத்தில் இளம் வயது அம்மா கதாபாத்திரம் தானே. கதை கேட்கும் போது, அம்மாவாக கீர்த்தி நடிப்பாரா என்றெல்லாம் இயக்குநர் யோசித்திருக்கலாம். ஆனால், நான் அதைப் பற்றியெல்லாம் யோசிக்கவே இல்லை. ஏனென்றால் கதை மிகவும் வலுவாக இருந்தது.

நடிக்க தயாரான முறை

கர்ப்பமாக இருக்கும் தாய் கதாபாத்திரம் என்றவுடன் அம்மாவிடம் தான் தொலைபேசியில் பேசினேன். எப்படி நடப்பார்கள், அமர்வார்கள், பேசுவார்கள் என்பதெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் ரொம்பவே தெளிவாக இருந்தார். அவரிடம் 100 கேள்விகள் கேட்பேன். அனைத்துமே ரொம்ப தெள்ளத் தெளிவாக சொல்லிக் கொடுத்தார். படத்தின் முதல் லுக் டெஸ்ட் பண்ணும் போதே, இயக்குநர் தான் நினைத்த கதாபாத்திரம் கிடைத்துவிட்டது என்று சொன்னார்.

'நடிகையர் திலகம்' மாதிரியான படங்களில் நடிப்பது ரொம்பவே கடினம். ஏனென்றால் இன்னொருத்தர் மாதிரியே நடிக்க வேண்டும். இதர படங்களில் நடிக்கும் போது, கதாபாத்திரம் மெருகேற்றலுக்காக மற்ற படங்களைப் பார்க்க மாட்டேன். ஏனென்றால் அதைப் பார்த்தால் அதே மாதிரி நடித்துவிடுவோமோ, நமது நடிப்பு மறைந்துவிடுமோ என நினைப்பேன். ஆனால், ஒரு படத்தில் நடித்து முடித்தவுடன் இதர படங்களைப் பார்ப்பேன். அப்போது நாம் சரியாக நடித்திருக்கிறோமா என்று தெரிந்து கொள்வேன். எனக்கு முக்கியம் இயக்குநர் சொல்வது மாதிரி நடிப்பது தான். ஏனென்றால் அவர் தானே கதை எழுதியிருக்கிறார்.

தேனீக்களிடம் தப்பித்தேன்

'பெண்குயின்' படப்பிடிப்பு தளத்தில் தேனீக்கள் துரத்தியது உண்மை தான். நான் தப்பித்துவிட்டேன். படக்குழுவினர் நிறையப் பேரை கடித்து கொஞ்சம் பிரச்சினையாகிவிட்டது. படப்பிடிப்பை கேன்சல் செய்துவிட்டு, அடுத்த நாள் தான் தொடங்கினோம். கொடைக்கானலில் படப்பிடிப்பு என்பதால் நல்ல குளிர். இடையே சில நாட்கள் குளிர் ஜுரம் எல்லாம் வந்துவிட்டது. குளிரில் படப்பிடிப்பு கொஞ்சம் பிரச்சினையாக இருந்தது. சென்னையில் சில காட்சிகளை எடுக்கும் போது, குளிருக்கான உடைகளைப் போட்டு இங்குள்ள வெயிலில் நடித்தேன். அது ரொம்பவே கடினமாக இருந்தது.

ஈஸ்வரிடம் பணிபுரிந்த அனுபவம்

அவர் கதை சொன்ன விதமே நன்றாக இருந்தது. தனது கதையின் மீது அவ்வளவு நம்பிக்கை இருந்தால் மட்டுமே, அப்படி கதை சொல்ல முடியும். இப்போது என் கண்ணிலிருந்து கண்ணீர் வருவது மாதிரி ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது அல்லவா, அதெல்லாமே என்னிடம் கதை சொல்லும் போதே வரைந்து வைத்திருந்தார். இப்படித்தான் நமது படத்தின் போஸ்டர் இருக்கும் என்று தெரிவித்தார். அவர் என்ன மனதில் வைத்திருக்கிறாரோ அது கொண்டுவந்துவிட வேண்டும் என நினைப்பார். அவர் ஒரு புதிய இயக்குநர் மாதிரியே எனக்கு தெரியவில்லை. 35 நாட்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துள்ளோம்.

கார்த்திக் சுப்புராஜ் அற்புதமான இயக்குநர்

கார்த்திக் சுப்புராஜ் ஒரு அற்புதமான இயக்குநர். இந்தப் படத்தின் பூஜையின் போது பேசினேன். அப்புறம் இப்போது தான் பேசுகிறேன்.

ஈஸ்வர் பற்றி பேசும் போது, இயக்குநரை ரொம்ப ப்ரீயாக விட்டுள்ளார். தேவையான இடங்களில் மட்டும் சில யோசனைகளைச் சொல்லியிருக்கிறார். ஒரு புதிய இயக்குநரை நம்பி, இவ்வளவு சுதந்திரம் கொடுப்பது பெரிய விஷயம்.

குழந்தைகளுக்கு எதிரான விஷயங்கள்

பல விஷயங்கள் நடக்கிறது. அதனால் தான் படங்கள் மூலமாக பல்வேறு கருத்துகள் சொல்கிறோம். 'பெண்குயின்' படத்தில் எந்தவொரு சமூக கருத்துமே கிடையாது. இதுவொரு பொழுதுபோக்கு திரைப்படம் தான். குழந்தையைக் காப்பாற்ற போராடுகிற ஒரு அம்மா. இது தான் கதை. ஆகையால் முழுக்கவே தாய்மையைப் போற்றுகிற படமாக இருக்கும். இந்தப் படம் பார்க்கிற அனைத்து தாய்மார்களுக்கும் கதையோடு ஒன்றிவிடுவார்கள்.

ஓடிடி வெளியீடு

திரையரங்கில் படம் பார்க்கும் அனுபவமே தனி தான்.  இப்போதுள்ள சூழலில் இந்தப் படம் திரையரங்கில் வெளியானால் இத்தனை பேர் ஒரே சமயத்தில் பார்ப்பார்களா என்பது தெரியாது. ஓடிடி-யில் ஒரே சமயத்தில் உலகம் முழுக்க பார்ப்பதற்கான வசதி இருக்கிறது. தொலைபேசி வாயிலாக கூடப் பார்க்கலாம். திரையரங்கில் வெளியாக வேண்டும் என்று காத்திருந்தால் எப்போது எனத் தெரியாது. நாட்களும் ஓடிக் கொண்டே தான் இருக்கும்.

குடும்பத்தினருடன் நேரம் செலவிடுதல்

கேரளாவில் வீட்டில் இருக்கிறேன். இவ்வளவு நாட்கள் அப்பா, அம்மா, அக்கா, பாட்டி ஆகியோருடன் இருந்ததில்லை.  பள்ளிக்காலத்துக்குப் பிறகு இப்போது தான் என நினைக்கிறேன். இந்த தருணத்தால் அனைவருமே மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

படங்களைக் குறைத்துவிட்டேனா?

'நடிகையர் திலகம்' படத்துக்குப் பிறகு நல்ல கதைகளைத் தேர்வு செய்யவே 6 மாதங்கள் வரை எடுத்தது. இந்த வருடம் தொடக்கத்தில் 'மாராக்கர்', 'மிஸ் இந்தியா', 'குட்லக் சக்கி', 'ரங் தே' என தொடர்ச்சியாக என்னுடைய படங்கள் வெளியாக இருந்தது. கரோனா பிரச்சினையால் எதுவுமே வெளியாகாத சூழல். இந்தப் பிரச்சினைக்கு நடுவில் 'பெண்குயின்' படம் வெளியாவதே சந்தோஷமாக இருக்கிறது. 'சர்கார்' படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் 'பெண்குயின்' வெளியாகிறது.

கதைகள் தேர்வில் தடுமாற்றம்

'நடிகையர் திலகம்' மாதிரி ஒரு படம் பண்ணிய பிறகு, பொறுப்புணர்வு அதிகமாகியுள்ளது. மக்களிடையே என்னுடைய படங்களுக்கு ஒரு எதிர்பார்ப்பும் இருக்கிறது. அதனால் கொஞ்சம் நேரம் எடுத்து கதைகளைத் தேர்வு செய்தேன். தற்போது நல்ல கதைகள் கிடைப்பது ரொம்பவே கஷ்டமான ஒரு சூழல். ஆகையால் 20 கதைகள் வரைக் கேட்டு, இந்தக் கதையைத் தேர்வு செய்தேன். 'மகாநடி' தெலுங்கில் ஒரு ப்ளாக் பஸ்டர் படமாக அமைந்தது. அதே மாதிரி தமிழில் ஒரு ப்ளாக்ஸ் பஸ்டர் கொடுக்க வேண்டும் என நினைத்தேன். அதற்கு 'பெண்குயின்' கதை பொருத்தமாக இருக்கும் எனத் தோன்றியது.

கோல்டு காயின்

பொதுவாகவே என் மனதுக்கு ரொம்பவே நெருக்கமாக இருக்கும் படங்களுக்கு கோல்டு காயின் கொடுப்பேன். முன்பு சில்வர் காயின் கொடுத்த முடிந்தது கொடுத்தேன். இப்போது கோல்டு காயின் கொடுக்க முடிந்ததால் கொடுக்கிறேன். என்னைப் பொறுத்தவரை லைட்மேன், உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட அனைவரையுமே பாராட்டி ஏதேனும் ஒன்றைக் கொடுக்கும் போது, அவர் அடையும் சந்தோஷமே வேறு. நம்மை ஞாபகம் வைத்துக் கொள்வார்கள் என்பதைத் தாண்டி, அவர்களுக்கு ஒரு சந்தோஷம் கிடைக்கும் அல்லவா. என் படத்தில் பணிபுரிகிறார்கள், பின் நான் பண்ணாமல் வேறு யார் பண்ணுவார்கள்.

மீண்டும் வயலின் பயிற்சி

உடற்பயிற்சி செய்கிறேன். கடந்த 2 மாதங்களாக யோகா செய்து கொண்டிருக்கிறேன். என்னிடம் ஒரு நாய்க்குட்டி இருக்கிறது. அது தான் எனக்கு பையன். இந்த லாக்டவுனில் அவனோடு நிறைய நேரம் செலவிட்டுக் கொண்டிருக்கிறேன். பள்ளிக் காலத்தில் வயலின் வாசித்துக் கொண்டிருந்தேன். கல்லூரிக்கு வந்தவுடன் விட்டுப் போச்சு. இப்போது மீண்டும் வயலின் வாசித்துக் கொண்டிருக்கிறேன். என்னைச் சுற்றி இருப்பவர்கள், தெரிந்தவர்களுக்கு என்னால் முடிந்தளவுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறேன்.

தேசிய விருது பற்றி யோசிப்பதில்லை

தேசிய விருது பற்றியெல்லாம் இப்போது யோசிப்பதில்லை. முதல் ரேங்க் கிடைத்துவிட்டது என்றால், சமூகப் பொறுப்பு அதிகமாக இருக்கும். தேசிய விருது கிடைத்துவிட்டது, அடுத்தும் விருது வாங்க வேண்டும் என்றெல்லாம் யோசிப்பதில்லை. சரியாக நடிக்க வேண்டும், நாம் நினைத்த கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார் என எனது இயக்குநர் சந்தோஷமாக இருக்க வேண்டும். ஒரு படத்தில் நடிக்கும் போது அந்த கதாபாத்திரத்துக்கு நியாயமாக இருக்க வேண்டும். ஒருவர் இந்த கதாபாத்திரத்தோடு ஒன்றிவிட்டீர்களே என்று யாராவது சொன்னால், அது தான் எனக்கு தேசிய விருது கிடைத்த மாதிரி.

கதை உருவாக்கம், படப்பிடிப்பு கஷ்டம்

இப்போது நடித்துக் கொண்டிருக்கும் படங்கள் எல்லாம், முன்பு எப்படி படமாக்கினோமோ அப்படி எடுத்தால் மட்டுமே முடிக்க முடியும். 'ரங் தே' என்ற படத்துக்காக இத்தாலிக்குச் சென்று படமாக்கலாம் என்று இருந்தோம். சில காட்சிகளை மட்டும் இங்கு வெளிநாட்டில் படமாக்கியது போல் எடுத்துவிட்டோம். இப்போது அந்தப் படம் எப்படி படமாக்குவது என்பது தெரியவில்லை. படப்பிடிப்பு தளத்தில் முன்பு போல் நிறைய பேர் பணிபுரிய முடியாது. 2 மாதங்கள் கழித்து நிறைய முன்னெச்சரிக்கையுடன்  வேண்டுமானால் பண்ணலாம். இப்போது புதிய கதைகள் எழுதும் போது, இந்த லாக்டவுன் எல்லாம் வைத்து காட்சிகள் அமைக்கிறார்கள்.

குடும்ப படம்

குடும்ப படம் கூடிய விரைவில் நடக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால் அக்கா கதை எழுதிக் கொண்டிருக்கிறார். அப்பாவும் அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார். இந்த லாக்டவுனில் அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். பெண்குயின் கதையை படிப்பது மாதிரி ஒரு வீடியோ பார்த்திருப்பீர்கள், அது நாங்கள் குடும்பமாக படமாக்கியது தான். அக்கா தான் இயக்கினார், அப்பா - அம்மா - பாட்டி எல்லாம் உதவிகரமாக இருந்தார்கள். அப்போது பாட்டி நான் நடிக்கும் போது கூட 6 மணிக்கு மேல் எல்லாம் நடித்தது கிடையாது. ஏனென்றால் இரவு 2 மணிக்கு ஷுட் பண்ணினோம். அப்போது எங்கப்பா இத்தனை நாளாக தயாரிப்பாளராக இருக்கிறேன். என்னை லைட்பாயாக ஆக்கிவிட்டாயே என்றார்.

சம்பளம் குறைப்பு

சம்பளத்தைக் குறைத்துத் தான் ஆகவேண்டும். அனைவருமே குறைக்க வேண்டும். 20% முதல் 30% குறைக்க வேண்டும் என்கிறார்கள். அதற்கு நான் தயாராக இருக்கிறேன். இப்போது பேசிட்டு இருக்கும் படங்கள் அனைத்துக்குமே சம்பளத்தைக் குறைத்துத் தான் பேசிட்டு இருக்கேன்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Interview with Keerthi suresh regarding her role in penguin

People looking for online information on Amazon Prime, Covid 19, Keerthy Suresh, Lockdown, OTT, Penguin will find this news story useful.