நேசமணியின் கதை படமாகிறதா? டைட்டில் என்ன தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகளவில் ட்ரெண்டான கான்ட்ராக்டர் நேசமணி பெயரில் திரைப்பட தலைப்பு ஒன்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Film title has been registered in Producer council inspired by Contractor Nesamani

கடந்த 2001ம் ஆண்டு இயக்குநர் சித்திக் இயக்கத்தில் தளபதி விஜய், சூர்யா, ரமேஷ் கண்ணா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஃபிரெண்ட்ஸ்’. இப்படத்தில் காமெடி நடிகர் வடிவேலுவின், பெயிண்டிங் கான்ட்ராக்டர் நேசமணி என்ற கதாபாத்திரம் சமூக வலைதளங்களில் உலகம் முழுவதும் நேற்று ட்ரெண்டானது.

அந்த படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சியில், தேவையில்லாத ஆணியை பிடுங்க மாடிக்கு சென்ற ரமேஷ் கண்ணா, கையில் இருந்த சுத்தியலை தவறவிட, அது கீழே நின்றுக் கொண்டிருந்த வடிவேலுவின் தலையில் விழுந்து அவர் மயங்கிவிடுவார். இந்த காமெடி சீனை வைத்து இளைஞர் ஒருவர், கான்ட்ராக்டர் நேசமணியின் தலையில் சுத்தியல் விழுந்து அவர் உயிருக்கு போராடி வருகிறார் என்ற நகைச்சுவையான பதிவு தான், நேசமணி ட்ரெண்டாக காரணமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து #Pray_For_Nesamani என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கிய நெட்டிசன்கள், உலகளவில் ட்ரெண்டாக்கினர். 

மீம்ஸ்களின் தலைவனாக வலம் வரும் நடிகர் வடிவேலுவின் சில கதாபாத்திரங்களும், அது ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருப்பதையும் யாராலும் மறுக்க முடியாது. அப்படியான நேசமணி கதாபாத்திரம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டான நிலையில், ‘கான்ட்ராக்டர் நேசமணி’ என்ற தலைப்பினை தமிழ் திரைப்பட தயாரிப்பாளார் ஒருவர் தயாரிப்பாளார் சங்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் இயக்குநர், நடிகர்கள் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் இன்னும் முடிவாகவில்லை என தெரிகிறது. இது கான்ட்ராக்டர் நேசமணியின் கதையை பற்றிய படமா என்பன போன்ற தகவல்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.